×

தேர்தல் பத்திரங்கள் மூலம் 45 சந்தேக நிறுவனங்களிடம் ரூ.1,068 கோடி வசூலித்த பாஜ: விசாரணை கோரும் ஆம் ஆத்மி

புதுடெல்லி: சந்தேகத்திற்கிடமான 45 நிறுவனங்களிடமிருந்து ரூ.1,068 கோடி நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜ பெற்றுள்ளதாகவும், இதுபற்றி ஒன்றிய புலனாய்வு அமைப்புகளால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் மற்றும் ஜாஸ்மின் ஷா இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, அவர்கள் தெரிவித்ததாவது: பாஜ கட்சிக்கு 45 சந்தேகத்திற்கிடமான நிறுவனங்கள் ரூ. 1,068 கோடி நன்கொடை அளித்துள்ளன. அவை நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்களாகும். அல்லது அவை வரி செலுத்தவில்லை அல்லது லாபத்தை விட அதிகமாக நன்கொடை அளித்தவையாகும். ஏழு ஆண்டுகளில் 33 நிறுவனங்கள் மொத்தமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. இந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜவுக்கு ரூ.450 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளன. இதில் 17 நிறுவனங்கள் பூஜ்ஜிய வரி அல்லது எதிர்மறை வரி செலுத்தியவை.

அதோடு, இந்நிறுவனங்கள் வரி விலக்குகளையும் பெற்றுள்ளன. மேலும், ஆறு நிறுவனங்கள் பாஜவுக்கு ரூ.600 கோடி நன்கொடை அளித்துள்ளன. அந்த தொகை அந்நிறுவனங்களின் லாபத்தை விட அதிகமான தொகையாகும். இன்னொரு நிறுவனம் தங்கள் லாபத்தை விட 93 மடங்கு அதிகமாக கொடுத்தது. மூன்று நிறுவனங்கள் ரூ.28 கோடி நன்கொடை அளித்து பூஜ்ஜிய வரியை செலுத்தியுள்ளன. உதாரணமாக நஷ்டம் ஏற்பட்டாலும் பாஜ.வுக்கு பல நிறுவனங்கள் தாராளமாக நன்கொடை அளித்தன. அவற்றில் முக்கியமானவை, பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம் ரூ.77,000 கோடி நஷ்டத்தை சந்தித்தபோதும் 200 கோடியை நன்கொடையாக வழங்கியது. இதற்கு கைமாறாக ரூ.8,200 கோடி வரிச்சலுகையை பெற்றது. மற்றொரு நிறுவனம் டிஎல்எப். இது 7 ஆண்டுகளில் 130 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த போதும், ரூ.25 கோடியை நன்கொடையாக வழங்கி 20 கோடி வரிச் சலுகை பெற்றது. தரிவால் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் ரூ.115 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கி பாஜவுக்கு சுமார் ரூ.24.96 கோடி நன்கொடை அளித்துள்ளது. இந்த நிறுவனத்தின் நஷ்டம் ரூ..299 கோடியாகும். இதனால் அவர்கள் பூஜ்ஜிய வரி செலுத்தியுள்ளனர்.

இதேபோல், பிஆர்எல் டெவலப்பர்ஸ் ரூ.20 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி, ரூ.10 கோடியை நன்கொடையாக அளித்து ரூ.4.7 கோடி வரிச்சலுகை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ரூ.1550 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. யூஜியா பார்மா லிமிடெட், இது சரத் சந்திர ரெட்டியின் நிறுவனமாகும். இந்நிறுவனம் 7 ஆண்டுகளில் 28 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்த நிலையிலும்,ரூ.15 கோடியை தேர்தல் பத்திர நிதியாக அளித்துள்ளது.
மேலும் 7.20 கோடி வரிவிலக்கு பெற்றுள்ளது. இதேபோன்று, மைத்ரா எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.19 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கி ரூ.9.99 கோடி கொடுத்தது. 7 ஆண்டுகளில் ரூ.86 கோடி நஷ்டம் ஏற்பட்டு ரூ.126 கோடி வரிவிலக்கு பெற்றுள்ளது.

பிரமல் கேபிடல் & ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் ரூ.10 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கி, ரூ.16,376 கோடி நஷ்டத்தைச் சந்தித்தபோதும் ரூ.10 கோடி நன்கொடை அளித்தது. இதற்கு ரூ.5178.50 கோடி வரிவிலக்கு கிடைத்தது. ஓரியண்டல் சவுத் டெல்லி ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் ரூ.5 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியது. மேலும் ரூ.5 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. ரூ.49 கோடி நஷ்டம் அடைந்த அந்த நிறுவனம் பூஜ்ஜிய வரியை செலுத்தியுள்ளது. வில்லேஜ் டி நந்தி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.5 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியது.

மேலும் ரூ.48 கோடி நஷ்டம் ஏற்பட்டாலும் முழுத் தொகையும் நன்கொடையாக வழங்கி உள்ளது. டாகிடோ குத்தகை ஆபரேட்டர்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.4 கோடி மதிப்பிலான பத்திரத்தை வாங்கி, முழுத் தொகையையும் வழங்கியது. இந்த நிறுவனம் ரூ.167 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதுதவிர, இன்னும் பல நிறுவனங்கள் லாபத்தைவிட ஆறு மடங்கு நிதி தாராளமாக அளித்துள்ளன. இவை அனைத்தும் பெரும் சந்தேகத்திற்குரியவை. இந்த நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பாஜ தலைவர்களை உடனடியாக விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

The post தேர்தல் பத்திரங்கள் மூலம் 45 சந்தேக நிறுவனங்களிடம் ரூ.1,068 கோடி வசூலித்த பாஜ: விசாரணை கோரும் ஆம் ஆத்மி appeared first on Dinakaran.

Tags : BJP ,Aam Aadmi ,New Delhi ,Aam Aadmi Party ,Union Intelligence Agency ,Delhi ,AAP ,Dinakaran ,
× RELATED நேற்று மாலை முதல் எரிகிறது; டெல்லி...