×

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை பாஜ மாவட்ட செயலாளர் மீது வழக்கு: போலீஸ் தேடுவதால் தலைமறைவு; அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவர்

பழநி: அரசு பள்ளியின் காலை உணவுத்திட்ட பெண் பொறுப்பாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில், பாஜ மாவட்ட செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் தலைமறைவாகி உள்ளார். இவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே ஒரு கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் காலை உணவுத்திட்ட பொறுப்பாளராக 38 வயது பெண் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று பணியில் இருந்தபோது, திண்டுக்கல் பாஜ மேற்கு மாவட்ட செயலாளரான மகுடீஸ்வரன், காலை உணவுத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதாகக் கூறி வந்துள்ளார்.

அப்போது மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. திடீரென உணவுக்கூடத்தின் கதவை அடைத்துவிட்டு அவர், திடீரென பெண் பொறுப்பாளரிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த பெண் பொறுப்பாளர் கூச்சலிட்டுள்ளார். இதனைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அச்சமடைந்த பாஜ மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து பெண் பொறுப்பாளர், சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மகுடீஸ்வரனை தேடி வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள மகுடீஸ்வரன், பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் நெருங்கிய நட்பில் இருப்பவர். திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜ நேரடியாக களம் கண்டிருந்தால், வேட்பாளராக மகுடீஸ்வரனே அறிவிக்கப்பட்டு இருப்பார் என அக்கட்சியினர் கூறினர். இந்நிலையில், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மகுடீஸ்வரன் நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியினர் யாரும் அவரும் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும், மாவட்டத் தலைவர் கனகராஜ் உடனடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, மிரட்டல், தாக்குதல் போன்ற சம்பவங்களில் பாஜவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவது தமிழக மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மகுடீஸ்வரன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கட்சியின் பல்வேறு தரப்பில் இருந்தும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு தகவல்கள் பறந்தன. இதன் எதிரொலியாகவே மகுடீஸ்வரன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட்டு இருப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

The post பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை பாஜ மாவட்ட செயலாளர் மீது வழக்கு: போலீஸ் தேடுவதால் தலைமறைவு; அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவர் appeared first on Dinakaran.

Tags : BJP district ,Annamalai ,Palani ,Dindigul district ,Dinakaran ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை