×

சென்னை, காஞ்சிபுரத்தில் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் வீடு, வீடாக சென்று தபால் வாக்கு பெறும் பணிகள் தொடங்கியது: 18ம் தேதிக்குள் அனைத்து தொகுதியிலும் நிறைவடையும்

சென்னை, காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு சேகரிக்கும் பணி நேற்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் வருகிற 18ம் தேதியுடன் தபால் வாக்கு பெறும் பணிகள் நிறைவடையும்.
நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. அந்த வகையில் பிற மாவட்டங்களில் கடந்த 4ம்தேதி தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கியது. அதன்படி ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் தபால் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. இந்நிலையில், சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நேற்று காலை முதல் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு பெறும் பணிகள் தொடங்கியது.

சென்னையை பொறுத்தவரை, 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களாக 11,369 பேரும், 85 வயதுக்குட்பட்ட வாக்காளர்களாக 63,754 பேரும், மாற்றுத்திறனாளிகள் 10,335 பேரும் உள்ளனர். இவர்களில் 4,491 பேர் மட்டுமே தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து 12டி விண்ணப்பம் பூர்த்தி செய்து வழங்கி இருந்தனர். இதுபற்றி முகவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு நேற்று (8ம் தேதி) முதல் சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மூலம் எவ்வாறு தபால் வாக்களிக்க வேண்டும் என்ற விளக்கம் அளித்து அதன்பேரில் அவர்களிடம் ரகசிய வாக்குப்பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணி வரும் 13ம் தேதி வரை நடைபெறும். இதில் மொத்தம் 67 குழுக்கள் ஈடுபட்டது. ஒவ்வொரு நடமாடும் குழுவிலும் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர், ஒரு உதவி வாக்குச்சாவடி அலுவலர், ஒரு நுண்பார்வையாளர், ஒரு காவலர் மற்றும் ஒரு புகைப்பட கலைஞர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுக்களை சேர்ந்தவர்கள் நேற்று காலை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வீடுகளுக்கு சென்றனர். அப்போது, தபால் வாக்கு சீட்டினை அவர்களிடம் அதிகாரிகள் வழங்கி, எப்படி வாக்களிப்பது என எடுத்துக்கூறி, பதிவு செய்யப்பட்ட வாக்குச்சீட்டு மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவற்றை திரும்ப பெற்றனர். இதேபோன்று காஞ்சிபுரம் தொகுதியிலும் நேற்று தபால் வாக்கு பெறப்பட்டது.

பின்னர் வாக்குச்சீட்டு உள்ள பெட்டி அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும். தபால் வாக்களிப்பு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பதிவான வாக்குகளும் வருகிற ஜூன் 4ம் தேதி எண்ணப்படும்.
தமிழகம் முழுவதும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,08,952 பேர் உள்ளனர். இவர்களில் 4,30,734 பேருக்கு 12டி விண்ணப்பம் வழங்கப்பட்டது. இதில் 77,445 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோன்று, தமிழகத்தில் மொத்தமுள்ள 4,61,908 மாற்றுத்திறனாளிகளில் 3,65,875 பேர் 12டி விண்ணப்பம் பெற்றிருந்தனர். இதில் 50,676 பேர் மட்டுமே தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்தனர். இவர்கள் அனைவரிடமும் வருகிற 18ம் தேதிக்குள் தபால் வாக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

The post சென்னை, காஞ்சிபுரத்தில் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் வீடு, வீடாக சென்று தபால் வாக்கு பெறும் பணிகள் தொடங்கியது: 18ம் தேதிக்குள் அனைத்து தொகுதியிலும் நிறைவடையும் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram, Chennai ,Kanchipuram ,Chennai ,Chennai, Kanchipuram ,
× RELATED மெட்ரோ பயணிகளுக்கு இனி ஸ்மார்ட் கார்டு கிடையாது