×

விவசாயம் சார்ந்த பகுதியான கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி களத்தில் முன்னணியில் நிற்பது யார்?

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி விவசாயம் சார்ந்த பகுதி என்றே கூறலாம். தமிழ்நாட்டில் 14வது மக்களவை தொகுதியாக கள்ளக்குறிச்சி விளங்குகிறது. கடந்த 2008க்கு முன்பு வரை கடலூர் மக்களவை தொகுதியாக இருந்தது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆத்தூர் (தனி), கெங்கவல்லி (தனி), ஏற்காடு (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கள்ளக்குறிச்சி (தனி), ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி கடந்த 2009ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி புதிதாக மறு உருவாக்கம் செய்யப்பட்டது.

இந்த தொகுதியில் பரவலாக வன்னியர், பட்டியலினத்தவர், உடையார், முதலியார், கவுண்டர், நாயுடு மற்றும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 80% மக்கள் விவசாயத்தை நம்பியே இருக்கின்றனர். இந்த தொகுதி கடந்த காலத்தை பார்க்கையில் கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி இதற்கு முன்பு 3 தேர்தலை சந்தித்துள்ளது. அதில் திமுக 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை கள்ளக்குறிச்சியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கௌதம சிகாமணி நாடாளுமன்றதில் 52 விவாதங்களில் பங்கேற்று 370 கேள்விகளை தொகுதி நலன் சார்ந்து முன்வைத்துள்ளார். இரண்டு தனி நபர் தீர்மானத்தையும் அவர் கொண்டு வந்திருக்கிறார். இந்து வாரிசு திருத்தம் மசோதா, நிலக்கரி தாங்கும் பகுதி (கையகப்படுத்துதல் மற்றும் மேம்பாடு) மசோதா கொண்டு வந்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். உளுந்தூர்பேட்டை, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருவழிப் பாதை 4 வழிப்பாதையாக சீரமைக்கப்பட்டது. சின்னசேலம், கள்ளக்குறிச்சி அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ரயில்வே துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளார். ஏற்காடு, கல்வராயன்மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வலியுறுத்தியுள்ளார். சேலம் முதல் விருத்தாசலம் வரை செல்லும் ரயிலில் கூடுதலாக பெட்டிகள் இணைக்க வலியுறுத்தியதன்பேரில் தற்போது 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்தமுறை கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் மலையரசன் களம் காண்கிறார். அதேபோல் அதிமுக சார்பில் குமரகுரு, பாமக சார்பில் தேவதாஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீசன் ஆகியோர் தேர்தல் களத்தில் உள்ளனர். இந்த தொகுதி திமுக செல்வாக்கு மிக்க தொகுதியாக உள்ளதால் வெற்றிக்கான சூழல் காணப்படுகிறது.

சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்
தொகுதி உறுப்பினர்
ரிஷிவந்தியம் வசந்தம் கே.கார்த்திகேயன் (திமுக)
சங்கராபுரம் உதயசூரியன் (திமுக)
கள்ளக்குறிச்சி (தனி) செந்தில்குமார் (அதிமுக)
கெங்கவள்ளி (தனி) நல்லதம்பி (அதிமுக)
ஆத்தூர் (தனி) ஜெயசங்கரன் (அதிமுக)
ஏற்காடு (தனி) சித்ரா (அதிமுக)

தொகுதி மறுசீரமைப்பிற்கு
பிறகு வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு வெற்றிபெற்றவர்கள் கட்சி
2009 ஆதி.சங்கர் திமுக
2014 காமராஜ் அதிமுக
2019 கௌதமசிகாமணி திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை
பாலினம் வாக்காளர்கள்
ஆண்கள் 7,68,729 பேர்
பெண்கள் 7,89,794 பேர்
3ம் பாலினத்தவர் 226 பேர்
மொத்தம் 15,58,749பேர்

தேர்தலில் வென்றவர்கள்
ஆண்டு வென்றவர்கள் கட்சி
1951 கோவிந்தசாமி தமிழர் உழைப்பாளர் கட்சி
1957 முத்துகுமரசாமி சுயேட்சை
1962 ராம்பத்ராநாயுடு திமுக
1967 வி.கே.கவுண்டர் திமுக
1971 ராதாகிருஷ்ணன் காங்கிரஸ்
1977 புவராகவன் காங்கிரஸ்
1980 முத்துகுமரன் காங்கிரஸ்
1984 வெங்கடேசன் காங்கிரஸ்
1989 வெங்கடேசன் காங்கிரஸ்
1991 கலியபெருமாள் காங்கிரஸ்
1996 வெங்கடேசன் த.மா.கா (மூப்பனார்)
1998 தாமோதரன் அதிமுக
1999 ஆதிசங்கர் திமுக
2004 வேங்கடபதி திமுக

The post விவசாயம் சார்ந்த பகுதியான கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி களத்தில் முன்னணியில் நிற்பது யார்? appeared first on Dinakaran.

Tags : Kallakurichi Lok Sabha ,Kallakurichi ,14th ,Lok Sabha ,Tamil Nadu ,Cuddalore ,Athur ,Salem district ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறை தினத்தையொட்டி...