- சித்திரை விஷு சிறப்பு பூஜை;
- சபரிமலை கோயில் நடை
- திருவனந்தபுரம்
- சித்ரா விஷு திருவிழா
- சபர்மதி அய்யப்பன் கோயில்
- சித்திரி விஷு திருவிழா
- சித்திரை விஷு சிறப்பு பூஜை
திருவனந்தபுரம்: சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருட சித்திரை விஷு பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வரும் 10ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறப்பார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் (11ஆம் தேதி) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்தமய பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
அன்று முதல் நெய்யபிஷேகமும் தொடங்கும். வரும் 14ம் தேதி பிரசித்தி பெற்ற விஷுக்கனி தரிசனம் நடைபெறுகிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கும். காலை முதல் பக்தர்கள் விஷுக்கனி தரிசனம் செய்யலாம். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் நாணயங்களை வழங்குவார்கள். வரும் 18ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். சித்திரை விஷு சிறப்பு பூஜைகளை முன்னிட்டு திருவனந்தபுரம், செங்கணூர், பத்தனம்திட்டா, கொட்டாரக்கரை, எருமேலி, புனலூர் ஆகிய உள்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கிவிட்டது.
The post சித்திரை விஷு சிறப்பு பூஜை; சபரிமலை கோயில் நடை 10ம் தேதி திறப்பு appeared first on Dinakaran.