×

தேர்தல் செலவுக்காக பாஜக வேட்பாளர்களுக்கு தலா ரூ.15 கோடி: முதல் கட்டமாக ரூ.8 கோடி விநியோகம்

சென்னை: தேர்தல் செலவுக்காக பாஜக வேட்பாளர்களுக்கு தலா ரூ.15 கோடி கொடுக்க மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக ரூ.8 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது நயினார் நாகேந்திரனின் பணத்தை கொண்டு சென்றவர்கள் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து புறப்பட்ட நெல்லை ரயிலில் போலீசார் சோதனையிட்டபோது ரூ.4 கோடி சிக்கியது. இது குறித்து பணத்தை கொண்டு சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை எடுத்துச் செல்வதாக கூறியுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் திடுக் தகவல்கள் தெரியவந்துள்ளன. தமிழகத்தில் பாஜக 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதைத் தவிர வேலூரில் ஏ.சி.சண்முகம், தென்காசியில் ஜான் பாண்டியன், சிவகங்கையில் தேவநாதன் யாதவ் ஆகியோரும் பாஜகவின் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் பல தொகுதிகளில் பாஜக 2வது இடத்தில் இருந்தது. தற்போது பல தொகுதிகளில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள பாஜக, பல இடங்களில் டெபாசிட் இழக்கும் என்று தெரியவந்துள்ளது. அதில், வேலூர், தேனி, திருவள்ளூர் ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே பாஜக 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதனால், பாஜக தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். பல தொகுதிகளில் செலவுக்கு பணம் இல்லாமல் அவர்கள் திண்டாடி வருகின்றனர். மேலிடத்தில் பணம் கேட்டு வந்தனர். இதனால் பாஜக நேரடியாக போட்டியிடும் 19 தொகுதிகளுக்கு தலா ரூ.15 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டு அந்தப் பணம் சென்னையில் உள்ள தலைமை அலுவலக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக 8 கோடி ரூபாய், வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில வேட்பாளர்கள் நேரடியாக ஆட்கள் மூலம் வாங்கிச் சென்றுள்ளனர்.

பலருக்கு ஹவாலா மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 7 கோடி ரூபாய் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் வழங்கப்பட்ட 8 கோடியில்தான் ரூ.4 கோடி தற்போது போலீஸ் வசம் சிக்கியுள்ளது. மீதம் உள்ள 4 கோடி குறித்து நிர்வாகிகள் வாய் திறக்க மறுத்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு வருமான வரித்துறையினடரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரூ.4 கோடி சிக்கியுள்ளதால், இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், நயினாருக்கு வழங்கப்பட்ட பணத்தை பாஜக நிர்வாகிகள் சிலரே உளவுத்துறைக்கு போட்டுக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கோவைக்கும் நேற்று முன்தினம் ரயில் பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேநேரத்தில் கோவையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படாமல், கிராமங்களில் உள்ள கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு கிராமத்துக்கு ரூ.10 லட்சம் தருவதாக பாஜக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிராம தலைவர்களுக்கு தனியாக பணமும் வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கு பணம் விநியோகம் செய்யும் பணி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில் கட்சி வழங்கும் ரூ.15 கோடி தவிர நிர்வாகிகள் பல தொழில் அதிபர்களிடமும் பணம் வசூலித்துள்ளனர். இந்தப் பணமும் தற்போது செலவு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், கட்சி ரூ.7 கோடியை ஓரிரு நாளில் வடசென்னையில் உள்ள மார்வாடிகள் மூலம் ஹவாலா முறையில் வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் பணம் சென்னையில் வழங்கப்பட்டு, சொந்த ஊர்களில் ஹவாலா ஏஜென்ட்கள் மூலம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பாஜகவினர் பணத்தை செலவு செய்யத் தொடங்கியுள்ளதால், பறக்கும் படையினர் முழுமையான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

The post தேர்தல் செலவுக்காக பாஜக வேட்பாளர்களுக்கு தலா ரூ.15 கோடி: முதல் கட்டமாக ரூ.8 கோடி விநியோகம் appeared first on Dinakaran.

Tags : BJP ,CHENNAI ,Supreme Court ,Nayanar Nagendran ,Dinakaran ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...