×

நோயாளி இறந்தால் டாக்டருக்கு 5 ஆண்டு சிறை: ஜூலை 1ம் தேதி ஒன்றிய அரசின் சட்டம் அமல்

சேலம்: மருத்துவர்கள் அலட்சியமாக சிகிச்சை அளித்து நோயாளி உயிரிழந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டம் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் பணியின்போது அலட்சியத்துடன் சிகிச்சை அளித்து நோயாளி உயிரிழந்தால் சிகிச்சை அளித்த மருத்துவருக்கு தண்டனை வழங்கும் வகையில், கடந்தாண்டு மூன்று குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது புதிய சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனைகள் குறித்து மருத்துவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தலைமை இயக்குனர் அதுல் கோயல் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மருத்துவர்கள் பணியின் போது அலட்சியமாக இருந்து நோயாளி உயிரிழந்தால், அது குற்ற வழக்காக பதிவு செய்யப்பட்டு இந்திய குற்றவியல் சட்டம் 304ஏ 1860ன் படி அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது பழைய சட்டத்திற்கு மாற்றாக, புதிதாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்சா சன்ஹிதா, பாரதிய சாஷிய அதிநியம் என்ற மூன்று புதிய சட்ட திருத்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டங்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. தற்போதைய புதிய சட்டத்தின்படி, மருத்துவர்கள் அலட்சியமாக இருந்து நோயாளி உயிரிழந்தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட மருத்துவருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். எனவே, இது தொடர்பான விழிப்புணர்வை அனைத்து மருத்துவர்களுக்கும் மாநில அரசுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post நோயாளி இறந்தால் டாக்டருக்கு 5 ஆண்டு சிறை: ஜூலை 1ம் தேதி ஒன்றிய அரசின் சட்டம் அமல் appeared first on Dinakaran.

Tags : Union government ,Salem ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...