×

கேகேஆரின் வெற்றி நடைக்கு முட்டுக்கட்டை போடுமா சிஎஸ்கே? சேப்பாக்கத்தில் இன்று மோதல்

சென்னை: 17வது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 22வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. சிஎஸ்கே முதல் 2 போட்டியில் சொந்த ஊரில் பெங்களூரு, குஜராத் அணிகளை வீழ்த்திய நிலையில் அடுத்த 2 போட்டியில் டெல்லி, சன்ரைசர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. டாப் ஆர்டர் பேட்டிங் சொதப்பல்தான் இதற்கு காரணம். இந்நிலையில் இன்று சொந்த மண்ணில் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் ஷிவம் துபே (148ரன்), ரகானே (119) ஆகிய 2 பேர் மட்டுமே 100 ரன்னுக்கு மேல் அடித்துள்ளனர். ரச்சின் ரவீந்திரா (97), டேரில் மிட்செல் (93), கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (88), ஜடேஜா(84) பெரிய அளவில் ரன் எடுக்கவில்லை. டோனி டெல்லிக்கு எதிராக 37, ஐதராபாத்திற்கு எதிராக ஒரு ரன் அடித்தார். இந்த 2 போட்டியிலும் அவர் நாட் அவுட்டாக இருந்தார். இதனால் இன்று அவர் முன்கூட்டியே களம் இறங்க வேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளது. பந்துவீச்சு மோசமாக உள்ளது. பவர் பிளேவில் ரன்களை வாரி இறைக்கின்றனர். பத்திரனா காயம் மேலும் பின்னடைவாக உள்ளது. இருப்பினும் முஸ்தாபிசுர் ரஹ்மான் இன்று களம் இறங்குவது ஆறுதலாக இருக்கும். சுழற்பந்துவீச்சும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பந்துவீச்சை வலுப்படுத்தினால் தான் வெற்றிபெற முடியும்.

மறுபுறம் கேகேஆர் அணி 3 போட்டியிலும் (ஐதராபாத், பெங்களூரு, டெல்லிக்கு எதிராக) வெற்றிபெற்று சூப்பர் பார்மில் உள்ளது. பேட்டிங்கில் பவுலரான சுனில் நரேன் 135 ரன் விளாசி, கடைசி 2 போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார். ரஸ்சல் பேட்டிங்கில் 105 ரன், பவுலிங்கில் 5 விக்கெட் என ஆல்ரவுண்டராக ஜொலிக்கிறார். பில்சால்ட், கேப்டன் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ், ரிங்குசிங் என சிறந்த பேட்டிங் ஆர்டர் உள்ளது. பவுலிங்கில் ஹர்ஷித் ரானா 2 இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்துள்ளார். முதல் 2 போட்டியில் விக்கெட் எடுக்காக ஸ்டார்க், டெல்லிக்கு எதிராக 2 விக்கெட் எடுத்தார். இன்று சென்னையை சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றியை தொடரும் முனைப்பில் கேகேஆர் உள்ளது.

The post கேகேஆரின் வெற்றி நடைக்கு முட்டுக்கட்டை போடுமா சிஎஸ்கே? சேப்பாக்கத்தில் இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : CSK ,KKR ,Chepak ,CHENNAI ,Chennai Super Kings ,Kolkata Knight Riders ,17th IPL ,Chepauk, Chennai ,Dinakaran ,
× RELATED தோனியுடன் இணைந்து ஆட்டத்தை முடித்தது...