மும்பை: நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த சிவப்பு இறைச்சியையும் சாப்பிடாத பெருமைமிக்க இந்து என்று பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக என்னைப் பற்றி ஆதாரமற்ற வதந்திகள் பரப்பபடுகின்றன. என் மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர்களை யாரும் தவறாக வழிநடத்த முடியாது என்று மாட்டிறைச்சி சாப்பிடும் கங்கனா என மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பேசியதற்கு கங்கனா பதில் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். கட்சியின் தலைவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியும், எதிர்க் குற்றம் சாட்டியும் வருகின்றனர். இந்நிலையில் இமாச்சல பிரதேசத்திலுள்ள மண்டி தொகுதியிலிருந்து பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா போட்டியிடுகிறார். இதற்காக மண்டி தொகுதியில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை கங்கனா மோடி அரசு மற்றும் இந்துத்துவா கொள்கைகளை ஆதரித்து சமூகவலைதளங்களில் பதிவிடும் பதிவுகளால் சர்ச்சை ஏற்படுவது வழக்கம். இதையடுத்து மகாராஷ்டிரா காங்கிரஸ் பிரமுகர் விஜய் வடேட்டிவார் காட்சிரோலியில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசுகையில், கங்கனா ரனாவத் ஒரு முறை எக்ஸ் தளத்தில் ‘தனக்கு மாட்டிறைச்சி பிடிக்கும். அதைச் சாப்பிட்டுள்ளேன். இந்த தேர்தலில் பாஜக ஊழல்வாதிகளை தேடி சீட் வழங்கியுள்ளது’ என கங்கண கூறியதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த சிவப்பு இறைச்சியையும் சாப்பிடாத பெருமைமிக்க இந்து என்று கங்கனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது; “நான் பல ஆண்டுகளாக யோகா, ஆயுர்வேத வாழ்க்கை முறையை பின்பற்றுவதோடு அதை பிறருக்கும் பரிந்துரைத்து வருகிறேன்.
இப்போது வதந்திகளைப் பரப்பும் முயற்சியால் எனது பிம்பம் சிதையாது. எனது தொகுதி மக்களுக்கு என்னைத் தெரியும். நான் ஒரு பெருமித இந்து என்பதை அவர்கள் அறிவார்கள். எதுவும் என்னைப் பற்றி அவர்கள் தவறாக நினைக்கும்படி செய்யாது. ஜெய் ஸ்ரீ ராம்” என பதிவிட்டுள்ளார்.
The post நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த சிவப்பு இறைச்சியையும் சாப்பிடாத பெருமைமிக்க இந்து: பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத் appeared first on Dinakaran.