×

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் 2வது நாளாக தீ

*பல ஏக்கர் குப்பைகள் சாம்பல்

கோவை : கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு வளாகம் 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.‌ இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரிக்கும் பணிகளும் மற்றும் குப்பை மூலம் உரம் தயாரிக்கும் பணிகளும் நடக்கிறது. தினமும் சுமார் 1000 டன் குப்பை இங்கே குவிக்கப்பட்டு வருகிறது. சுமார் 25 லட்சம் டன் குப்பை இங்கே குவிந்துள்ளதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக குப்பை தரம் பிரிப்பு பணி முறையாக நடப்பதில்லை. குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

வெள்ளலூர், போத்தனூர், செட்டிபாளையம், மேட்டூர், கோண வாய்க்கால் பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்து காணப்படுகிறது. குப்பைகளினால் இந்த பகுதியில் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. குப்பைகளை முறையாக தரம் பிரித்து கொட்ட வேண்டும். மண்டல அளவில் குப்பை மாற்று நிலையங்கள் மூலம் தரம் பிரித்து அகற்ற வேண்டும். வெள்ளலூர் குப்பைக்கிடங்குக்கு கொண்டு வரும் குப்பைகளின் அளவை வெகுவாக குறைக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் மூலமாக உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவும் முறையாக பின்பற்றப்படவில்லை.

மாறாக குப்பை கிடங்கில் குப்பைகள் தீ பிடித்து எரிவது அடிக்கடி நடக்கிறது.வெயில் அதிகரித்து வரும் நிலையில் குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் மதியம் தீ பரவியது. தீயணைப்பு துறையினர் தொடர்ந்து போராடியும் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைக்கும் பணிகள் நடந்த போதிலும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டாவது நாளாக தீ தொடர்ந்து எரிந்தது. சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் கொட்டி வைத்த பல ஆயிரம் டன் குப்பைகள் தீயில் எரிந்தது. தீப்பிடிக்க என்ன காரணம் என கண்டுபிடிக்க முடியவில்லை. குப்பையில் மீத்தேன் வாயு உற்பத்தியாகி தானாக தீ பிடித்திருக்கலாம். இல்லாவிட்டால் குப்பை தரம் பிரிக்கும் பணியில் உள்ளவர்கள், குப்பைக்கிடங்கிற்கு சென்று வரும் நபர்கள் மூலமாக தீ வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வெள்ளலூர் மாசு மீட்டு குழுவை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘‘குப்பை பராமரிக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் அதை சரியாக செய்யவில்லை. பயோ மைனிங் முறையாக நடக்கவில்லை. குப்பையை தரம் பிரிக்காமல் பிரித்துவிட்டது போல் காட்டி மோசடி செய்கிறார்கள். அலட்சியம் காரணமாக இரண்டு நாட்களாக குப்பை தீப்பற்றி எரிந்தது. தரம் பிரிக்கும் பணி சரியாக நடந்தது. பல ஆயிரம் டன் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டது என கணக்கு காட்ட இரண்டு நிறுவனங்கள் விதிமுறை மீறல் செய்வதாக தெரிகிறது. இதன் மூலமாக சுமார் 20 கோடி ரூபாய் பயன் பெறுவதற்காக சதி செயல் செய்திருக்கலாம்.

இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி மோசடியை கண்டறிய வேண்டும். குப்பை கிடங்கில் பயோ மைனிங் பணிகளுக்காக 10 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டமைப்பு மற்றும் கூடாரம் உருவாக்கப்பட்டது. இதற்கான ஆண்டு வாடகை மாநகராட்சிக்கு 2 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும். இந்தத் தொகை கடந்த சில ஆண்டாக வழங்கப்படவில்லை. குப்பைக்கிடங்கில் குப்பை தரம் பிரிப்பு உள்ளிட்ட எந்த பணிகளும் நடக்காமல் கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறிவிட்டது. தீ பரவல் இனியும் நடக்காமல் தடுக்க வேண்டும்’’ என்றனர்.

தீயணைப்பு துறையினர் கூறுகையில், ‘‘காற்று வீச்சு, வெப்பத்தினால் தீ அணைப்பது சவாலாக இருக்கிறது. 40 வாகனங்களில் ஆயிரம் லோடு தண்ணீர் கொட்டியும் தீ அணையவில்லை. 2 நாளுக்கு தீ, புகை தாக்கம் இருக்கிறது. ஜேசிபி மூலமாக குப்பைகளை களைந்து தீயை அணைக்கிறோம்’’ என்றனர்.

The post வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் 2வது நாளாக தீ appeared first on Dinakaran.

Tags : Vellalur ,Gowai Vellore Garbage Disposal Complex ,Dinakaran ,
× RELATED தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு...