×

ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்கள் நடவுக்கு ஏற்ற தருணம் வாழை சாகுபடியில் அதிக மகசூல்

*தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு

வலங்கைமான் : ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்கள் நடவு ஏற்ற தருணம், வாழை சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம் என்று தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.மண் மற்றும் தட்பவெப்பநிலை நன்கு வடிகால் உடைய, ஆழமான, வளமான களிமண் மற்றும் உப்பு நிறைந்த களிமண் வாழைகளை வளர்ப்பதற்கு சிறந்தது. மேலும் மண்ணில் போதுமான வளம் மற்றும் ஈரப்பதம் தாங்கும் திறன் இருந்தால் அது மிகவும் அற்புதமானது.

மேலும் வாழை வெப்பமண்டலங்களுக்கு ஏற்ற செடியாகும்.நீர் வசதி இருப்பின் எப்போது வேண்டுமானாலும் நடவு செய்யலாம். மேலும் ஜனவரி – பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்கள் நடவு செய்ய ஏற்றதாகும். நல்ல மகசூல் பெற தரமான கன்றுகளைத் தேர்வு செய்து நடுதல் வேண்டும். தாய் மரத்திற்கு அருகாமையில், கிழங்கிலிருந்து வளரும், கன்றின் உயரம் 2-3 அடி இருப்பது சிறந்தவை. மேலும் இவற்றின் எடை 1.5 முதல் 2.0 கிலோ எடை இருக்கவேண்டும்.

வாழையில் பெரும்பாலான நோய் விதை கன்றுகள் வழியாக வருகிறது. இதை கட்டுப்படுத்த கிழங்குகளை 5 நிமிடம் 0.1 சதம் எமிசான் கரைசலில் ( 1 கிராமினை 1 லிட்டர் தண்ணீரில் கரைக்கவேண்டும்) நனைத்து நடவு செய்யவேண்டும். இவ்வாறு செய்வதனால் வாடல் நோயை கட்டுப்படுத்தலாம். நிலத்தை 2 முதல் 4 தடவை நன்கு உழவேண்டும். பிறகு நன்கு மக்கிய தொழு உரத்தை 25 டன் என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு கொடுக்கவேண்டும்.

பிறகு நேர்த்தி செய்த கன்றுகள் போதிய இடைவெளியில் நடவுசெய்ய வேண்டும். பொதுவாக வாழைக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். கோடை காலங்களில் 4-5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சவேண்டும். அதேபோல் குளிர் களங்களில் 7-8நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சலாம்.வாழையில் களைக்கட்டுப்பாடு மிகவும் முக்கியமான ஒன்று. சரியான நேரங்களில் களைகளை அகற்றாவிட்டால் வாழையின் மகசூலை முற்றிலுமாக குறைத்துவிடும்.

மேலும் களைகள் அதிக அளவில் இருந்தால் களைக்கொல்லியை பயன்படுத்தாமல் ஆட்கள் கொண்டு களைகளை அகற்றுவது நல்லது. மேலும் நீங்கள் வாழையுடன் ஊடுபயிராக மற்ற பயிர் செய்வதனால் களைகளை கட்டுப்படுத்தலாம்.வாழையில் ஊடுபயிராக அவரை வகைக் காய்கறிகள், பீட்ரூட், சணல் போன்றவற்றை சாகுபடி செய்யலாம். பூசணி குடும்பத்தில் வரும் எந்த வித காய்கறிகளையும் ஊடுபயிராக நடவு செய்ய கூடாது.

சிகடோக்கா இலைப்புள்ளி நோய் தாக்கிய இலைகளில் முதலில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி, பின் அவை பழுப்பு நிறமாக மாறி இருக்கும். பாதிக்கப்பட்ட இலைகள் நுனியிலிருந்து கருக ஆரம்பித்து இலை முழுவதும் விரைவில் காய்ந்து விடும். இதனை கட்டுப்படுத்த கார்பென்டாசிம் 2 கிராம் மருந்தை 100 மில்லி அளவு தண்ணீரில் கரைத்து அதிலிருந்து 3 மில்லி மருந்தை எடுத்த ஊசி மூலம் தண்டுப்பகுதியில் கொடுக்கலாம். 350 நாட்கள் கழித்து தார்களை அறுவடை செய்யலாம்.

The post ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்கள் நடவுக்கு ஏற்ற தருணம் வாழை சாகுபடியில் அதிக மகசூல் appeared first on Dinakaran.

Tags : Valangaiman ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு