×

தேர்தல் ஆணைய கெடுபிடிகளால் களையிழந்த ஆடுகள் விற்பனை: ரம்ஜானுக்கு ஆடுகளை வாங்க முடியாமல் வியாபாரிகள் தவிப்பு

புதுக்கோட்டை: ரூ. 50,000க்கும் மேல் பணம் எடுத்துச்செல்லக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகைக்கான ஆடுகள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கால்நடை விற்பனைக்கு புகழ் பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி அதிகாலையிலேயே ஏராளமான ஆடுகள் கோழிகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.

ஆனால் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் எதிரொலியாக குறைந்த அளவிலேயே வியாபாரிகள் விராலிமலை சந்தைக்கு வந்திருந்தனர். வழக்கமாக ரம்ஜான் பண்டிகை நாட்களில் ஒரே நாளில் 1 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடைபெறும் நிலையில் இந்த முறை தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளால் 30 முதல் 50 லட்சம் ரூபாய் வரையே விற்பனை நடைபெற்றுள்ளதாக கால்நடை வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் மேலூர் சந்தைக்கு தும்பைபட்டி, எட்டிமங்கலம், மேலவளவு, பட்டூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து ஏராளமான ஆடுகள், கோழிகள், கொண்டுவரப்பட்டன. கால்நடைகள் வரத்து அதிகரித்த போதிலும் தேர்தல் ஆணைய கெடுபிடிகளால் வழக்கமான வெளிமாவட்ட வியாபாரிகள் வராததால் கால்நடை சந்தை களையிழந்து காணப்பட்டது. கையிருப்பிலிருந்த பணத்தை கொண்டு செல்லும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர்.

ஒரு சில வியாபாரிகள் மின்னணு பண பரிமாற்ற முறையில் கால்நடை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தி ஆடுகளை வாங்கி சென்றனர். வழக்கமாக பண்டிகை கால சந்தைகளின் போது 3 முதல் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் நிலையில் மேலூரில் இன்று 1 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post தேர்தல் ஆணைய கெடுபிடிகளால் களையிழந்த ஆடுகள் விற்பனை: ரம்ஜானுக்கு ஆடுகளை வாங்க முடியாமல் வியாபாரிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : EC ,Pudukottai ,Livestock ,Ramzan festival ,Tamil Nadu ,Election Commission ,Ramzan ,Viralimalai ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...