×
Saravana Stores

வரலாறு காணாத அளவில் கூடலூரில் கொளுத்தும் கோடை வெயில்-பாகற்காய் விவசாயம் பாதிப்பு

கூடலூர் : வரலாறு காணாத அளவில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் கோடை வெயில் கொளுத்துவதால் பாகற்காய் விவசாயம் கடுமையாக பாதித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மிதமான காலநிலையை கொண்ட கூடலூர் பகுதியில் வரலாறு காணாத அளவில் இந்த வருடம் அதிக அளவிலான வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வருவது வெகுவாக குறைந்துள்ளது.

கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகள் நீலகிரி மாவட்டத்தின் குளிர்ச்சியான மலைத்தொடர்களுக்கும், வடக்கு மற்றும் மேற்கு பகுதி கேரளா மற்றும் கர்நாடகாவின் எல்லைகளில் உள்ள மாறுபட்ட கால நிலைகளுக்கும் இடையே கூடலூர் சட்டமன்றத் தொகுதி அமைந்துள்ளது. அதிக குளிர், அதிக சூடு இல்லாத மிதமான வெப்பநிலையை கொண்ட பகுதி. கடல் மட்டத்தில் இருந்து 1,100 மீட்டரில் அமைந்துள்ள கூடலூர் பந்தலூர் பகுதிகள் குளிர்காலத்தில் ஊட்டியில் நிலவும் உறை பனி காலத்திலும், தென்மேல் பருவ மழையின் கடுமையான மழை காலங்களிலும் மனிதர்கள் தாங்கக்கூடிய மிதமான குளிர்ச்சியான சூழலே காணப்படும்.

இதேபோல மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட வெப்ப காலங்களிலும் இடையிடையே பெய்யும் கோடை மழையின் தாக்கம் இருக்கும். இதன் காரணமாக மிதமான வெப்ப நிலையை அனுபவிக்க முடியும். மேலும் குளிர்காலம் முடிந்து கோடை காலம் துவங்குவதற்கு இடையிலே உள்ள வசந்த காலத்தில் ஏராளமான மரங்கள், செடி கொடிகளை பூக்கள் பூத்துக்குலுங்கும். கோடை மழையின் கொடையை வைத்து விவசாயிகள் கோடைகால பயிர்களான காய்கறி விவசாயத்தில் ஈடுபடுவர். வெப்பம் அதிகரித்துள்ளதாலும் கோடை மழை பொய்த்துள்ளதாலும் விவசாயத்துக்கு ஆதாரமாக உள்ள குளம், குட்டைகள், சிற்றாறுகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் எந்த வருடத்திலும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு அதிகரித்து காணப்படுகிறது.

சமவெளி பகுதிகளுக்கு இணையாக கூடலூர் பகுயிலும் வெப்பத்தில் தாக்கம் அதிகரித்து உள்ளது. வெப்பத்தின் அளவு 33 முதல் 35 செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது. நீர் ஆதார பகுதிகளில் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளதால் உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் பல்வேறு சிரமங்களுக்கு இடையே குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஸ்ரீ மதுரை கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவதேவன் கூறுகையில் ‘‘கடும் வெப்பம் காரணமாக வாழை மற்றும் பாகற்காய் விவசாயம் பாதித்து உள்ளது.

உற்பத்தி குறைந்துள்ளதால் அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. அதிக அளவில் தேயிலை மற்றும் காப்பி விவசாயத்தை கொண்ட இப்பகுதியில் மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாத துவக்கத்தில் பெய்ய வேண்டிய ஓரிரு கோடை மழையும் இதுவரை பெய்யவில்லை. காப்பிச்செடிகள் பூத்து காய் பிடிக்க வேண்டிய பருவமும் தாமதமாகிறது. தேயிலை செடிகளில் பசுந்தேயிலை உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது’’ என்றார்.

The post வரலாறு காணாத அளவில் கூடலூரில் கொளுத்தும் கோடை வெயில்-பாகற்காய் விவசாயம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Nilgiris ,Nilgiris district ,Cudalur ,Dinakaran ,
× RELATED ஊட்டியில் தொடர் மழையால் மேரிகோல்டு மலர்கள் அழுகின