×

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடந்தது.வரும் 19ம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்துக்கு துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, துணை ராணுவப் படையை சேர்ந்த 82 வீரர்கள் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்தனர்.

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலையில் நேற்று மாலை துணை ராணுவ வீரர்கள் நேற்று கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். அண்ணா சிலை அருகேயிருந்து தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலத்தை எஸ்பி கார்த்திகேயன் தொடங்கி வைத்து பங்கேற்றார். நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று, தண்டராம்பட்டு சாலையில் நிறைவடைந்தது. அதில், திருவண்ணாமலை டிஎஸ்பி ரவிச்சந்திரன் உட்பட போலீசாரும் கலந்து கொண்டனர். மேலும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது.

வந்தவாசி: ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் அமைதியான முறையில் நடக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடந்தது. வந்தவாசி தெற்கு காவல் நிலையம் முன்பு புறப்பட்ட ஊர்வலம் தாலுகா அலுவலகம் சாலை, கோட்டை மூலை, மத்துமரைக்காயர் தெரு, குளத்துமேடு, தர்மராஜா கோயில் தெரு, பாலுடையார் தெரு, சன்னதி தெரு, தேரடி, காந்தி சாலை, பஜார் வீதி, பழைய பஸ் நிலையம், ஆரணி சாலை, காஞ்சிபுரம் சாலை வழியாக காவல் நிலையத்தை அடைந்தது. மத்திய போலீஸ் பாதுகாப்பு படை மற்றும் வந்தவாசி உட்கோட்ட போலீசார் இணைந்து ஊர்வலத்தை நடத்தினர்.இதில், டிஎஸ்பி கங்காதரன், இன்ஸ்பெக்டர்கள் விஸ்வநாதன், பாலு, லட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

The post மக்களவைத் தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Tiruvannamalai ,Tamil Nadu ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு