×
Saravana Stores

கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விதை நெல் இருப்பு வைக்க வேண்டும்

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம் ஆகி வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய விதை நெல் இருப்பு வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடியின்போது அம்பை 16, திருப்பதிசாரம் 5 ரக நெல்களை அதிகம் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தவிர கும்பப்பூ சாகுபடியின்போது பொன்மணி, திருப்பதிசாரம் 3 நெல் ரகங்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பாரம்பரிய நெல் ரகங்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் கும்பப்பூ அறுவடை பணி முடியும் நிலையில் உள்ளது. முதலில் அறுவடை நடந்த விளை நிலங்களில் கன்னிப்பூ சாகுபடி பணியை மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்தம் ஆகி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் நாற்றங்கால் தயாரிப்பார்கள். ஆனால் பறக்கை ஏலாவில் கன்னிப்பூ சாகுபடிக்கு பங்குனி உத்திரம் அன்று பறக்கை பெரிய குளங்களில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

இந்த வருடம் ஏப்ரல் 4ம் தேதி பறக்கை பெரிய குளங்கள் திறக்கப்பட்டு, வயல்களை பண்படுத்தி ஏப்ரல் 14ம் தேதியான சித்திரை 1ம் தேதி நாற்றங்கால் தயாரிக்கவுள்ளனர். இதுபோல் மாவட்டத்தில் முதலில் அறுவடை செய்யப்பட்ட இடங்களில் சித்திரை 1ம் தேதியும், தாமதமாக அறுவடை செய்யப்பட்ட இடங்களில் சித்திரை 10ம் தேதியும் நாற்றங்கால் தயாரிப்பு பணியில் விவசாயிகள் ஈடுபடவுள்ளனர்.

பின்பு ஜூன் 1ம் தேதி சாகுபடி பணியை விவசாயிகள் மேற்கொள்வார்கள். இதற்காக அறுவடை செய்யப்பட்ட வயல்களை உழுது காயப்போட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிதொடங்கும் நிலையில் விதை நெல் இருப்பு வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து முன்னோடி விவசாயி செண்பகசேரபிள்ளை கூறியதாவது:

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ சாகுபடிகள் நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திலும், வெளி மார்க்கெட்டிலும் நெல்லிற்கு நல்ல விலை கிடைப்பதால், தற்போது விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த கன்னிப்பூ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பின்போது காலதாமதம், அறுவடையின்போது ஏற்பட்ட மழை பாதிப்பால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். இதன் காரணமாக கும்பப்பூ சாகுபடி பணியும் தாமதமாக தொடங்கியது.

தற்போது மாவட்டத்தில் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணிக்கு ஆயத்தம் ஆகி வருகின்றனர். அவர்களின் வசதிக்காக வேளாண்மை துறை அம்பை 16, திருப்பதிசாரம் 5 ரக நெல்விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய பகுதியிலும் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் விதை நெல் விவசாயிகளுக்கு தேவைக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

The post கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விதை நெல் இருப்பு வைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Nagarko ,Kumari district ,Kumari ,
× RELATED சுசீந்திரம் அருகே பழையாற்றில் ஆகாய...