*செக்போஸ்டில் சிறப்பு பார்வையாளர் ஆய்வு
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் ரயில்கள், ஆம்னி பஸ்களில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். குமரி – கேரள எல்லையில் சிறப்பு பார்வையாளர்கள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பண பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளன.
தற்போது வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரசார வாகனங்கள், வேட்பாளர்களின் வாகனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்களின் வாகனங்கள் மட்டுமின்றி, தேர்தல் காரியாலயங்களிலும் திடீரென பறக்கும் படையினர் சென்று சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.இது தவிர பஸ், ரயில்களிலும் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து தற்போது பஸ்கள், ரயில்களிலும் பறக்கும் படையினர் தீவிர சோதனையை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரயில்களில் சோதனையை பறக்கும் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ரூ.1.88 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரயில்களில் சோதனையை அதிகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதால் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு சென்னை, பெங்களூரு, கோவை, மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த ரயில்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ரயில்களில் வந்திறங்கிய பயணிகளிடமும் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். ரயில் நிலையத்துக்கு வெளியே நின்று கார்கள், ஆட்டோக்கள், பைக்குகளில் சென்றவர்களிடமும் சோதனை நடந்தது. இந்த சோதனை தொடரும் என்று அதிகாரிகள் கூறினர். ரயில்களில் வரும் பார்சல்களிலும் சோதனை நடந்து வருகிறது.
இதே போல் தனியார் ஆம்னி பஸ்களிலும் அதிகாலையில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தில் நேற்று காலை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்ெகாண்டனர். பயணிகளின் உடமைகள் மட்டுமின்றி, பார்சல்களும் சோதனை செய்யப்பட்டன. மேலும் எல்லைேயார பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் குமரி – கேரள எல்லை பகுதியையொட்டி உள்ள களியக்காவிளை சோதனை சாவடியில் கூடுதல் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சோதனை சாவடிகள் மட்டுமின்றி களியக்காவிளை பஸ் நிலையம் மற்றும் நெடுஞ்சாலைகளிலும் கேமராக்கள் அமைத்துள்ளனர். மொத்தம் 60 கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. சோதனை சாவடிகளில் அனைத்து கார்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. பைக்கில் செல்பவர்களிடமும் சோதனை நடந்து வருகிறது.
குமரி – கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடியில் தேர்தல் சிறப்பு பார்வையாளர் (காவல்துறை), நிபல்குமார் வைபவ் சந்திரகாந்த் ஆய்வு செய்தார். அங்குள்ள பதிவேடுகளை பார்வையிட்ட அவர், வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். டாஸ்மாக் விற்பனையும் தினமும் ஆய்வு செய்யப்படுகிறது. சராசரியாக கடந்த மாத விற்பனை எவ்வளவு? இந்த மாத விற்பனை எவ்வளவு நடைபெறுகிறது.
டாஸ்மாக் கடைகளில் இருந்து மொத்தமாக மதுபான கொள்முதல் நடைபெறுகிறதா? என்பதும் கண்காணிக்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் இருந்தோ, மதுபான குடோன்களில் இருந்தோ மொத்தமாக மதுபானங்கள் விற்பனை நடைபெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் பார்கள் அதிகமாக தற்போது உள்ளன. இந்த பார்களிலும் மதுபான கொள்முதல் பற்றிய கணக்கெடுப்பை தேர்தல் அதிகாரிகள் கையிலெடுத்துள்ளனர்.
தனியார் பார்கள் மூலம் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு மொத்தமாக அரசியல் கட்சிகளுக்கு வினியோகம் செய்யப்படலாம் என்பதால் அது தொடர்பான கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குமரி மாவட்டத்தில் நாள் தோறும் சராசரியாக ரூ.3 கோடிக்கு விற்பனை நடைபெறும். கடந்த பிப்ரவரி மாதத்தை ஒப்பிடுகையில் கடந்த மார்ச் மாதம் விற்பனை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரித்து உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். ஏப்ரல் முதல் வார கணக்கெடுப்பு படியும், விற்பனை அதிகரித்து உள்ளது. நாள்தோறும் நடைபெறும் விற்பனையை தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் கணக்கெடுப்பு செய்து வருகிறார்கள்.
பொதுமக்கள் புகார் அளிக்கலாம்
குமரி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க வசதியாக குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட எஸ்பி அலுவலகம் ஆகியவற்றில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 1050 என்ற எண் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 8010 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. எஸ்.பி. அலுவலக கட்டுப்பாட்டு அறையை 7010363173 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post அரசியல் கட்சிகள் பணம் கொண்டு வருவதை தடுக்க ஆம்னி பஸ்கள், ரயில்களில் தீவிர சோதனை appeared first on Dinakaran.