×

யுகாதி, ரம்ஜான் பண்டிகையையொட்டி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ₹6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

*விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

போச்சம்பள்ளி : யுகாதி, ரம்ஜான் பண்டிகையையொட்டி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று ₹6 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடும் சந்தை பிரசித்தம். இங்கு, தக்காளி முதல் தங்கம் வரை விற்பனை செய்யப்படும். ரம்ஜான், தெலுங்கு வருட பிறப்பு மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி, நேற்று கூடிய சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது.

வளர்ப்பு குட்டி ஆடு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையும், 10 கிலோ கொண்ட ஆடு ₹10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரத்துக்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:கர்நாடகா, ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை 9ம் தேதி(நாளை) கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து வரும் 11ம் தேதி(வியாழக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், போச்சம்பள்ளி வாரச்சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் விற்பனை 3 மடங்கு அதிகரித்தது.

ஆடுகள் வாங்கவும் -விற்கவும் உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநில வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனர். 10 கிலோ கொண்ட ஒரு ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விலை போனது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ஆடுகள் விலை உயர்ந்தது. பண்டிகைக்கு ஆடுகள் தேவைப்படுவதால், வேறு வழியின்றி தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி சந்தைக்கு வந்த வியாபாரிகள் செல்போன் மூலம், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி ஆடுகளை வாங்கிச் சென்றனர். இதனால், இந்த வாரம் அனைத்து ஆடுகளும் விற்பனையானது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

போச்சம்பள்ளி அருகே மருதேரி தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அரியக்கா -பெரியக்கா கோயில் விழா, 3 வருடத்திற்கு ஒருமுறை நடப்பது வழக்கம். நேர்த்திக் கடனாக வெள்ளாடுகளை கோயிலுக்கு விடுவது வழக்கம். கோயில் விழாவின் போது, ஆயிரக்கணக்கான ஆடுகளை பலியிட்டு உறவிர்களுக்கும் கறி விருந்து வழங்குவது வழக்கம்.

இதற்காக நேற்று கூடிய போச்சம்பள்ளி சந்தையில், வெள்ளாடுகள் விற்பனை களை கட்டியது. கடந்த வாரம் ₹3 ஆயிரத்திற்கு விலை போன வெள்ளாடு குட்டி, நேற்று ₹5 ஆயிரம் வரை விலை உயர்ந்தது.

The post யுகாதி, ரம்ஜான் பண்டிகையையொட்டி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ₹6 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Bochampalli ,Yugadi and Ramzan ,Yugadi and Ramzan festival ,Krishnagiri District ,Bochampalli weekly market ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...