×

ரிஷிவந்தியம் அருகே சாலையில் தூங்கிய பெண் மீது மினி லாரி ஏறி பலி

ரிஷிவந்தியம் : கள்ளக்குறிச்சி மாவட்டம், பகண்டை கூட்டு சாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி தாமஸ் மனைவி பேபி மனோரஞ்சிதம் (62), இவர் அங்கன்வாடி மையத்தில் பொறுப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் எதிரில் உள்ள சிமெண்ட் சாலையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, பக்கத்து தெருவில் உள்ள மாரிமுத்து என்பவரது வீட்டிற்கு கதவு மற்றும் ஜன்னல் உள்ளிட்ட பொருட்களை மினி லாரி மூலம் தியாகதுருவத்தில் இருந்து பழைய சிறுவங்கூருக்கு எடுத்துக் கொண்டு வந்து இறக்கிவிட்டு மீண்டும் பல்லகச்சேரி செல்வதற்காக கிழக்கிலிருந்து மேற்காக செல்லும் சாலையில் சென்றபோது அங்கு சிமெண்ட் சாலையில் படுத்திருந்த பேபி மனோரஞ்சிதம் மீது வாகனத்தின் முன் சக்கரம் ஏறி இறங்கி உள்ளது.

இதையடுத்து, படுகாயம் அடைந்த மனோரஞ்சிதத்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பகண்டை கூட்டு சாலை போலீசார் வழக்கு பதிந்து அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர். வாகனத்தின் முகப்பு விளக்குகள் பழுதடைந்து இருந்ததால்தான் விபத்தில் பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

The post ரிஷிவந்தியம் அருகே சாலையில் தூங்கிய பெண் மீது மினி லாரி ஏறி பலி appeared first on Dinakaran.

Tags : Rishivantiyam ,Rishivanthiam ,Baby Manoranjitham ,Murthy Thomas ,Old Siruvangur ,Pakandai Joint Road Police Station ,Kallakurichi District ,Anganwadi Centre ,Dinakaran ,
× RELATED ஆட்டோ மோதி முதியவர் பலி