×

நோட்டாவிடம் போட்டியிடவே மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில்கூட பாஜ டெபாசிட் வாங்காது

*தேர்தல் பிரசார கூட்டத்தில் கி.வீரமணி பேச்சு

கோவை : தமிழ்நாட்டில் ஒரு இடத்தில்கூட பாஜ டெபாசிட் வாங்காது, நோட்டாவிடம் போட்டியிடவே மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார் என கோவை தேர்தல் பிரசார கூட்டத்தில் கி.வீரமணி பேசினார். கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, தெப்பக்குளம் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில், திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி பேசியதாவது: தனிப்பட்ட முறையில் மோடிக்கும், நமக்கும் எந்த வெறுப்போ, கசப்போ கிடையாது. ஆனால், அவர் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் வஞ்சிப்பதால் நாம் அவரை எதிர்க்க வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் ரோடு ஷோ போகும் பிரதமர் மோடி, மணிப்பூர் சென்றாரா? தத்துவ ரீதியான தேர்தலில், பாசிச சக்தியை முறியடிக்க வேண்டியுள்ளது. நாட்டில், இறையாண்மையை காக்க வேண்டியுள்ளது. ஒன்றியத்தில் பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடே சிறைச்சாலையாக மாறும். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் தத்துவம். நம் நாட்டுக்கு தேவை ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என சீர்தூக்கி பார்க்கும் தேர்தல் இது.

இவை இரண்டில் எது வேண்டும் என நாம்தான் தீர்மானிக்க வேண்டும். பழங்குடியின பெண் என்பதால், ஜனாதிபதியையே அவமதிக்கிறார்கள். பிறகு, எப்படி சாதாரண பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும்? எதிரிகளை வாதத்தால் வெல்ல முடியாத கோழைகள் பாஜவினர். அதனால்தான், ஐடி, ஈடி, சிபிஐ என ஒன்றிய அரசின் அமைப்புகளை எதிர்கட்சியினர் மீது ஏவி விடுகிறார்கள். இந்த திரிசூலத்தை கண்டு நாம் ஒருபோதும் அஞ்சப்போவது இல்லை. அந்த திரிசூலம் நம்மை வெல்லப்போவதும் இல்லை. மோடி, இரு தலைவர்களை கண்டு அச்சம் கொள்கிறார். ஒருவர் ராகுல்காந்தி, மற்றொருவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் ஒரு இடத்தில்கூட டெபாசிட் வாங்க முடியாது. நோட்டோவிடம் போட்டியிடவே மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். பிரதமர் மோடி, தமிழகத்தில் வீடு எடுத்து தங்கினாலும், இங்கு வெல்ல முடியாது. பெண்களுக்கு, முன்பு வாக்குரிமை மறுக்கப்பட்டது. அதை முறியடித்து, வாக்குரிமை கொடுத்த ஒரே இயக்கம் நீதிக்கட்சி என்கிற நம்முடைய திராவிடர் இயக்கம்.

எனவே, பெண்கள் தங்கள் சக்தியை, இந்த தேர்தலில் பயன்படுத்த வேண்டும். இத்தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்லும். பிரதமராக ராகுல்காந்தி வருவார். தொழில்துறை புனரமைக்கப்பட்டு, புதிய தொழிற்சாலைகள் துவக்கப்பட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இவ்வாறு கி.வீரமணி பேசினார்.

கூட்டத்தில், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், மதிமுக உயர்நிலை குழு உறுப்பினர் ஆர்ஆர்.மோகன்குமார், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கருப்புசாமி, ஆதிதமிழர் பேரவை ரவிக்குமார், தமிழ்புலிகள் கட்சி தலைவர் திருவள்ளுவன், திராவிட இயக்க தமிழர் பேரவை கா.சு.நாகராசன், திமுக பகுதி செயலாளர் மார்க்கெட் மனோகரன், வக்கீல் ஜிடி.ராஜேந்திரன், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன், வார்டு செயலாளர் சுரேஷ் நாராயணன், மாநகராட்சி கவுன்சிலர் சர்மிளா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post நோட்டாவிடம் போட்டியிடவே மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில்கூட பாஜ டெபாசிட் வாங்காது appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,BJP ,K. Veeramani ,Coimbatore ,Tamilnadu ,Coimbatore Parliamentary Constituency ,DMK ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...