×

தொழில்நுட்ப கோளாறு சீர் செய்யப்பட்டது; ஆன்லைனில் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: தொழில்நுட்ப கோளாறு சீர் செய்யப்பட்டதாகவும், பயணிகள் ஆன்லைன் மூலமாகவே டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் எனவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.

மெட்ரோ ரயில் பயணத்தை பொறுத்தவரையில் கவுன்ட்டர் மட்டுமின்றி ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட் பெறும் வசதியை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடந்து வழங்கி வருகிறது. மெட்ரோ ரயில் டிக்கெட் ஆன்லைன் மூலமாக செயலி வழியாகவும், யூபிஐ பணப்பரிவர்த்தனை மூலமாகவும், வாட்ஸ் அப் செயலி மூலமாகவும் டிக்கெட் பெறக்கூடிய வசதிகள் உள்ளன.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெறும் வசதியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் மெட்ரோ ரயில் பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது;

“தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மொபைல் பயன்பாடு உள்ளிட்ட ஆன்லைன் டிக்கெட்டுகள் தற்போது வேலை செய்யவில்லை. பயணிகள் மெட்ரோ ரயில் நிலைய கவுன்டர்களில் டிக்கெட் வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன” என தெரிவிக்கப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் ஒரு மணி நேரம் ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருந்த நிலையில் பின்னர் சீர் செய்யப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.

“தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. சிஎம்ஆர்எல் மொபைல் பயன்பாடு உட்பட ஆன்லைன் டிக்கெட் இப்போது வேலை செய்கிறது. சிங்கார சென்னை கார்டு, சிஎம்ஆர்எல் டிராவல் கார்டுகள் உள்ளிட்ட அனைத்து டிக்கெட் முறைகளும் வழக்கம் போல் இயங்குகின்றன” என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post தொழில்நுட்ப கோளாறு சீர் செய்யப்பட்டது; ஆன்லைனில் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Metro Rail Administration ,Chennai ,Chennai Metro Administration ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக WhatsApp Chatbot...