×

தேர்தலில் நேர்மை, நியாயம் பற்றி பேச தகுதியே இல்லாத கட்சி பாஜ: ராமரை கூட வாக்கு சாவடி ஏஜென்ட்டாக பார்க்கும் மோடி

1 மோடி அரசு கொடுக்கும் திட்டத்தை தமிழகத்தில் உள்ள கும்பல் சுரண்டுவதாக அண்ணாமலை கூறுகிறாரே. உங்கள் கருத்து என்ன? பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு இந்த நல்லது செய்துள்ளார் என்று ஒன்றை கூட சொல்ல முடியாது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டை பழிவாங்கும் போக்கில் தான் அவர் செயல்பட்டு வருகிறார்.

அவருடைய 10 ஆண்டு கால ஆட்சியில் எய்ம்ஸ் மருத்துவமனையை கூட முழுமையாக தரவில்லை. அடிக்கல் நாட்டியதோடு சரி. சமீபத்தில் வந்த வெள்ளத்திற்கு கூட நிதி கொடுக்கவில்லை. அவர் என்ன திட்டங்கள் கொடுத்துவிட்டார், தமிழகத்தில் உள்ள கும்பல்கள் சுரண்டுவதற்கு. இப்படிப்பட்ட பேச்சுக்களை பேச அண்ணாமலையால் மட்டுமே முடியும். பொய்யை மட்டுமே பேசும் தலைவர் அண்ணாமலைதான் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

2 ஓட்டுக்கு பணம் தர மாட்டேன் என அண்ணாமலை கூறியிருந்தார். தற்போது ரூ.4 கோடி பிடிபட்டு பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களிடம் விசாரணை நடப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? தேர்தலில் நேர்மை, நியாயம் பற்றி பேசுவதற்கு தகுதியே இல்லாத கட்சி பாஜ. பல மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களையே கோடிக்கணக்கில் விலை கொடுத்து வாங்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது பாஜதான். சமீபத்தில் இமாச்சல் பிரதேசத்தில் கூட 6 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி உள்ளனர். இப்படிப்பட்டவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கமாட்டார்கள் என்று கூறினால் யார் நம்புவார்கள். அரசியல் எனும் பெயரில் பாஜ நடத்துவது பச்சையான அரசியல் நாடகம் தான்.

3 ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் வரவில்லை என பிரதமர் மோடி கூறியிருக்கிறார். மத அரசியலை முன்னிறுத்தி அவர் பிரசாரம் செய்கிறாரே? மத உணர்வு அனைவருக்குமே இருக்கும். ஆனால், மத உணர்வை அரசியலாக்குவது ஒரு கீழ்த்தரமான செயல். நீங்கள் மக்கள் மத்தியில் உங்கள் கொள்கைகள், திட்டங்கள் குறித்து பேசுங்கள், அது தான் சரியான முறை. ஆனால், ஒரு மதத்தை அரசியலாக பயன்படுத்தினால் மற்ற மதத்தினரை எதிராளியாகத்தானே பார்க்கிறீர்கள்.

பாஜ பேச்சு எங்கும் எடுபடவில்லை என்பதனால் தான் ராமர் கோயிலை அவசர அவசரமாக திறந்தனர். ராமரை கூட வாக்கு சாவடி ஏஜென்ட்டாகத்தான் பிரதமர் மோடி பார்க்கிறார். கோயிலை திறந்து சிலையை பிரதிஷ்டை செய்வதா ஒரு பிரதமரின் வேலை. இந்து மதத்திற்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்த சங்கராச்சாரியாரே இந்த விழாவை புறக்கணித்தார். எங்கள் இந்தியா கூட்டணி மதத்தை எதிர்க்கவில்லை. ஒரு மதம் உயர்ந்தது ஒரு மதம் தாழ்ந்தது என்று பார்க்காமல் எல்லா மதத்தினரையும் சமமாக பார்க்கிறோம். அதனால் தான் நாங்கள் யாரும் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு செல்லவில்லை.

4 ராகுலின் நடைபயணம் இந்தியா கூட்டணிக்கு வலு சேர்க்குமா?
முன்பை காட்டிலும் மிக வலுவாக இந்தியா கூட்டணி சென்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்திய அளவில் மோடி தலைமையில் இருக்கும் கூட்டணி கட்சிகள் பல இடத்தில் சிதைந்து விட்டது. அவர்களால் கூட்டணியை கூட சரியாக கட்டமைக்க முடியவில்லை என்பதை கண்கூடாக பார்க்கிறோம். எனவே ராகுல் காந்தியின் நடை பயணம் மட்டுமல்ல, அனைவரின் ஆண்டுகால பணிகளால் இந்தியாவில் நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியும்.

 

The post தேர்தலில் நேர்மை, நியாயம் பற்றி பேச தகுதியே இல்லாத கட்சி பாஜ: ராமரை கூட வாக்கு சாவடி ஏஜென்ட்டாக பார்க்கும் மோடி appeared first on Dinakaran.

Tags : BJP ,Modi ,Ram ,Annamalai ,Tamil Nadu ,Modi government ,Dinakaran ,
× RELATED பாஜகவில் இணைந்தவர்கள் மீதான...