×

வேற மாதிரி ஆகிடும் ஊடகத்தினரை மிரட்டிய அண்ணாமலை

கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் அண்ணாமலை நேற்று பிரசாரம் செய்தார். ஒரு கிராமத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது, செல்லும் வழியில் ஊடகத்தினர் சேனல் வாகனம் அண்ணாமலை சென்ற பிரசார வாகனத்தை முந்தி முன்னே சென்றதாக தெரிகிறது. அதை பார்த்த அண்ணாமலை கடுப்பானார். பின்னர் அந்த வாகனத்தை நிறுத்திய அவர், ‘இனிமேல் என்னுடைய வண்டி பிரசாரத்துக்குள்ள உங்க வண்டி பிரசாரத்துக்கு வந்தால் வேற மாதிரி ஆகிடும்’ என்று மிரட்டினார்.

பின்னர் வாகனத்தில் ஏறச்சென்றவர் மீண்டும் வந்து, ‘‘மீடியா வந்து மரியாதை கொடுத்து மரியாதை வாங்கனும். இந்த பழக்கத்தை என்னிடம் வைத்துக்கொள்ளாதீங்க. மக்கள் ஓட்டுப்போடுறாங்க. மக்கள பார்க்கிறோம். நீங்க மீடியாவுல கவர் பண்ணி போட்டு யாரும் ஓட்டு போடவில்லை. கிராமத்தில் வந்து அட்டூழியம் பண்றீங்களா. மரியாதை வைத்திருக்கிறேன். கெடுத்துக்காதீங்க. அண்ணாமலையிடம் வைத்துக்கொள்ளாதீர்கள்?’’ என்று சகட்டுமேனிக்கு பேசினார்.

ஊடகத்தினரை அண்ணாமலை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பகிரும் நெட்டிசன்கள், மக்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாகவும், அதை படம் எடுத்ததால் அண்ணாமலை டென்ஷன் ஆனதாகவும் கமெண்ட் செய்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன் திருப்பூர் பாஜ வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்தின் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ‘வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்துக்கு அலைய வைத்து விடுவேன்’ என்று அவர்களை மிரட்டினார். இந்த சர்ச்சை முடிவதற்குள் அண்ணாமலை ஊடகத்தினரை மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* மன்னிப்பு கேட்க கோரி அடாவடி
பல்லடத்தில் அண்ணாமலை பிரசாரத்தை சென்னையில் இருந்து சென்ற பாஜ கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்தவர்கள் ஒளிப்பதிவு செய்தனர். அப்போது செட்டிபாளையம் பிரிவில் உள்ளூரை சேர்ந்த ஒரு பத்திரிகையாளருக்கும், பாஜ தகவல் தொழில்நுட்ப அணியினருக்கும் இடையே போட்டோ எடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பாஜ ஐடி விங்கை சேர்ந்தவர்கள், தகாத வார்த்தையில் பேசியதால் ஆத்திரம் அடைந்த உள்ளூர் பத்திரிக்கையாளர் முதலில் மரியாதையாக பேசுங்க என்று கூறியுள்ளார்.

இதை பார்த்த அண்ணாமலை, பத்திரிகையாளர் பாஜ ஐடி விங்க் வாக்கி டாக்கியை பறித்து உடைத்து விட்டதாக கூறி, அவர் மன்னிப்பு கோர வேண்டும் இல்லை என்றால் நானே போலீசில் புகார் கொடுப்பேன் என்று மிரட்டல் விடுத்துவிட்டு சென்றார். இந்நிலையில் மாலையில் பாஜ கூட்டணி கட்சியான உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து இரு தரப்பினரை அழைத்து பேசி அண்ணாமலை முன்னிலையில் சமரசம் செய்து வைத்தார்.

The post வேற மாதிரி ஆகிடும் ஊடகத்தினரை மிரட்டிய அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Palladam ,Goa ,
× RELATED ஓட்டுக்கு பணம் கொடுத்தேனா: அண்ணாமலை பரபரப்பு பேட்டி