×

என்ன பேசுகிறார் என்றே தெரியாமல் கலைந்து சென்ற மக்கள்: பிசுபிசுத்த ஜே.பி.நட்டா பொதுக்கூட்டம், ரோடு ஷோ

பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிதம்பரம், கரூர், விருதுநகர் பாஜ வேட்பாளர்கள் கார்த்தியாயினி, செந்தில்நாதன், ராதிகா மற்றும் கூட்டணி கட்சி சார்பில் திருச்சியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் ஆகியோரை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார். அரியலூர், திருமங்கலத்தில் பாஜ வேட்பாளர்கள் கார்த்தியாயினி, ராதிகாவை ஆதரித்து பாஜ தேசிய தலைவர் ஜே.பி நட்டா பேசினார்.
இதைத்தொடர்ந்து, கரூர் பாஜ வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பேசுவதற்காக பாஜ தேசியத்தலைவர் ஜே.பி நட்டா கரூர் வருகை தந்தார்.

இதற்காக 2 ஆயிரம் பேர் அமர்ந்து நட்டாவின் உரையை கேட்கும் வகையில் கட்சி நிர்வாகிகள் சேர்களை வரிசைபடுத்தி இருந்தனர். மதியம் 1.30 மணியளவில் நட்டா மேடை ஏறினார். மேடை ஏறியதும்.., ஏறாததுமாக வடமாநிலம் போன்று நினைத்துக்கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் குறித்து தெரியாத நட்டா, இந்தியில் பேசவா..? இங்கிலீசில் பேசவா..? எனக்கேட்டுள்ளார். அவர் கேட்டதே, நம்மாளுங்களுக்கு புரியாமல் விழிக்க.., மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி என ஜே.பி நட்டா இந்தியில் அவர்பாட்டுக்கு பேச தொடங்கினார்.

கடுப்பான மக்கள் அட போங்கப்பா… என ஜே.பி நட்டா பேசத்துவங்கிய சில நிமிடங்களில் கும்பல் கும்பலாக எழுந்து வெளியேறத்துவங்கினர். இதில் பதறிப்போன கட்சி நிர்வாகிகள் வெளியே சென்ற மக்களை எவ்வளவோ தடுத்து நிறுத்தி சமாதானம் செய்ய முயற்சித்தும் அவர்களால் முடிய வில்லை. அங்கிருந்து கிளம்பிய மக்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ள மனதில்லாமல் விட்டால் போதும் சாமி என ஒரு கும்பிடு போட்டு அங்கிருந்து இடத்தை காலி செய்தனர்.

‘காசு வாங்குனோம்’ என்பதற்காக இந்த கொடுமையை எல்லாம் அனுபவிக்க முடியாதுங்க என அவர்களுக்குள் கிண்டலாக பேசிக் கொண்டு அங்கிருந்து நடையை கட்டியதால் மண்டபம் முழுவதும் காலியாக இருந்தது. வெறும் சேர்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது. மண்டபத்தில் இருந்து யார் போனால் எனக்கென்ன என காலி சேர்களுடன் ஜேபி நட்டா அசராமல் தனது உரையை நிகழ்த்தி முடித்துள்ளார். இதை கண்ட கட்சி நிர்வாகிகள்.., என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நின்றனர். இதைத்தொடர்ந்து திருச்சியில் ரோடு ஷோவில் நட்டா பங்கேற்றார்.

எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லாததால், வெறுப்படைந்த நட்டா, போடுங்கம்மா ஓட்டு..! குக்கர் சின்னத்தை பார்த்து என குக்கர் சின்னத்தை காட்டி இந்தியில் ஓட்டு கேட்டுவிட்டு, கையில் கட்டியிறுந்த வாட்சை காட்டி, ‘டைம் ஆயிடுச்சு.., நான் புறப்படுகிறேன் எனக்கூறி டாட்டா காட்டிவிட்டு சென்றதால் ‘நட்டா ரோடு ஷோ’ நிகழ்ச்சி பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.

* ரோடு ஷோ: ஐகோர்ட் குட்டு
திருச்சியில் ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோவுக்கு பாஜவினர் கேட்ட பாதையில் பல்வேறு சிக்கல் இருப்பதாக கூறி போலீசார் அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து பாஜ நிர்வாகி ராஜசேகரன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில்குமார், ‘‘ரோட் ஷோ தேர்வு செய்யப்பட்ட பாதை பொதுமக்கள் நடைபாதையாக உள்ளது. வாகன நெரிசல் உள்ளது.

பல்வேறு மத வழிபாட்டுத்தலங்கள் உள்ளதால் அந்த பகுதியில் அனுமதி வழங்க முடியாது.கண்ணப்பா ஹோட்டல் முதல் இஎஸ்ஐ வரை மாற்று பாதையில் ரோட் ஷோ நடத்த அனுமதி வழங்கப்படும்’’ என்று உறுதி அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மாற்றுப் பாதையான கண்ணப்பா ஹோட்டல் முதல் இஎஸ்ஐ மருத்துவமனை வரை நாலு மணி முதல் ஆறு மணி வரைக்குள் ரோட் ஷோ நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

* அதிமுகவுக்கு ஓட்டு கேட்ட நட்டா
திருமங்கலத்தில் கூட்டம் முடிவடைந்த பின்பு வெற்றி சின்னமாக இரட்டை விரலை நட்டா காட்டவே அதனை கண்ட ஹெச்.ராஜா இரட்டை கைவிரலை காட்ட வேண்டாம். அது அதிமுக சின்னத்தினை குறிக்கும் என கூறவே வணக்கம் தெரிவித்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிமுக கூட்டணியில் இல்லை என்பதை நட்டாவுக்கு கட்சியினர் சொல்லவில்லை போல என்று கிண்டலடித்தனர்.

The post என்ன பேசுகிறார் என்றே தெரியாமல் கலைந்து சென்ற மக்கள்: பிசுபிசுத்த ஜே.பி.நட்டா பொதுக்கூட்டம், ரோடு ஷோ appeared first on Dinakaran.

Tags : Visphisuttha ,JP Natta ,BJP ,National President ,JP Natta Chidambaram ,Karur ,Virudhunagar ,Karthiyaini ,Senthilnathan ,Radhika ,AAMUK ,Trichy ,Ariyalur ,Tirumangalam ,Bisupishuttha ,
× RELATED ஒன்றியத்தில் பலவீனமான அரசை விரும்புகிறார் மம்தா: நட்டா குற்றச்சாட்டு