×

திராவிடத்தை அழிக்கலாம் என்பது மக்களை மதிக்காத மடத்தனம்: நங்கநல்லூர் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு

சென்னை: ஸ்ரீபெரும்புத்தூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நங்கநல்லூர் மெயின்ரோட்டில் நேற்று பேசியதாவது:- ஒரு சீட்டு வாங்கி இருக்கலாமென்று சொல்கிறார்கள். இருக்கிற அவசரத்தில் அதையெல்லாம் பார்க்க முடியாது. நிற்க இடம் வேண்டும், அப்புறம் உட்காருவதைப் பற்றி யோசிப்போம். நான் செஞ்சது தியாகமில்லை. நம் அனைவரின் எதிர்காலத்திற்காக பேட்ட வியூகம். நான் உங்களை மாதிரி அரசியலை வெளியே இருந்து வேடிக்கை பார்க்கிறவன்.

ஒரு அரசு நல்ல திட்டம் போட்டா, இன்னொரு அரசு அதை நடத்தவிடாம பண்றது நாட்டுக்கு நல்லதல்ல. உலக தரத்தில் சிங்கப்பூரில் உள்ளதுபோல ஒரு லைப்ரரியை உருவாக்கிட்டு, அதற்குள்ளே போறதுக்கு கூட அனுமதிக்காதபடி செஞ்சிட்டாங்க. அதை செய்யக்கூடாது. எதையும் செய்யவிடாமல் தடுப்பது ஒன்றிய அரசுதான். ஒரு திட்டத்தை கொண்டு வரும்போது அது வேண்டாம், அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டா இவங்கள என்ன செய்வது?

முக்கியமாக வெள்ளம் வந்தபோது ஒரு நிதியும் கொடுத்து அனுப்பல. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு சொல்லி கொடுத்துட்டா அதுக்கு ஈக்குவல் என்று சொல்லுவார்கள். நமது முதல்வர் முதலில் சாப்பிடுடா… அப்புறம் படிடா என்று இரண்டையும் செய்றாரு. அது ரொம்ப முக்கியம். அவரது மகன் உலகத் தரத்தில் தமிழர்கள் ஸ்போர்ட்சில் வர வேண்டும் என்பதற்காக பல ஏற்பாடுகளை செய்துகொண்டு வருகிறார். பணக்கார வீட்டு பிள்ளைகள், வசதியானவர்கள் மட்டும் ஸ்போர்ட்சில் வரலாம் என்பதில்லை.

இந்த வீதியில் இருப்பவர்கள் நாளை ஆசியன் சாம்பியன்களாக வரலாம். திராவிடம் நாடு தழுவியது, அதை அழிக்கலாம் என்பது மக்களை மதிக்காத மடத்தனம். நான் கோபமாக பேசுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். நல்ல அரசாக இருந்தாலும் எந்த அரசாக இருந்தாலும் பாராட்டவேண்டும். அடுத்த வாய்ப்பு கொடுக்க வேண்டியது நம் கடமை. இனி எலக்சனே இருக்காது என அவநம்பிக்கை கொள்ளாதீங்க. இல்லாம பண்ணிட்டா அடுத்த நாட்டுக்காரங்க எல்லாம் வைவார்கள். அதனால அடுத்த எலெக்சன் வரும், ஒரே வேட்பாளர் இருப்பாரு, ஒரே பட்டன் இருக்கும், ஒரே மொழி இருக்கும், அது இந்தியில் இருக்கும்.

அதுமட்டுமல்ல நமது தேசிய கொடியில் இனி ஒரே கலர்தான் இருக்கும். ஒரு கலரா மாத்தனும்னு நினைக்கிறாங்க. அத மாத்த நான் விடமாட்டேன். நீங்க எப்படியோ எனக்கு தெரியாது, உங்களை பார்த்தால் நீங்களும் அதே எண்ணத்தில் உள்ளீர்கள் என நினைக்கிறேன். அந்த உணர்ச்சியை இந்த தேர்தலில் காண்பிக்க வேண்டும். இவருக்கு ஒட்டு போடுங்கள் என வற்புறுத்துவதற்காக வரவில்லை, நீங்களும் யோசியுங்கள். இதற்கு முன்னால் பணிகளை செய்தவரை நம்பி அடியெடுத்து வைக்கலாம். அவர் 3 அடி எடுத்து வைப்பார், நாளை நமதே. இவ்வாறு பேசினார்.

The post திராவிடத்தை அழிக்கலாம் என்பது மக்களை மதிக்காத மடத்தனம்: நங்கநல்லூர் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,Nanganallur ,Chennai ,Sriperumputhur Parliamentary ,DMK ,DR ,Balu ,People's Justice Center ,President ,Nanganallur Main Road ,Nanganallur campaign ,Dinakaran ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...