×

11ம் தேதிவரை வெப்பம் அதிகரிக்கும் தமிழ்நாட்டில் 108 டிகிரி வெயில்: 14 இடங்களில் சதம் அடித்தது

சென்னை: தமிழ்நாட்டில் வறண்ட வானிலை காரணமாக நேற்று 14 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. 2 இடங்களில் 108 டிகிரியும், 5 இடங்களில் 106 டிகிரி வெயிலும் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக பல்வேறு இடங்களில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனால் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நேற்று கடுமையாக இருக்கிறது. பகலில் பொதுமக்கள் வெளியில் வரவே தயக்கம் காட்டுகின்றனர்.

வெப்பநிலையை பொறுத்தவரை தமிழக உள் மாவட்டங்களில் சமவெளிப் பகுதியில் அநேக இடங்களில் 3-5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. உள் மாவட்டங்களில் கரூர் மற்றும் தர்மபுரியில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 4.5 டிகிரி செல்சியசுக்கும் மிக அதிமாகவே வெப்பநிலை இருந்தது. இதன்படி, ஈரோடு, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் 108 டிகிரி (பாரன்ஹீட்), தர்மபுரி, நாமக்கல், திருச்சி, திருத்தணி, வேலூர் மாவட்டங்களில் 106 டிகிரி, கோவை, கரூர், மதுரை, தஞ்சாவூர் மாவட்டங்களில் 104 டிகிரி, சென்னை 102 டிகிரி, பாளையங்கோட்டை 100 டிகிரி வெயில் கொளுத்தியது.

தமிழக கடலோரப் பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 37 டிகிரி செல்சியஸ்(இயல்பைவிட 2.4 டிகிரி செல்சியஸ் அதிகம்) மீனம்பாக்கத்தில் 40 டிகிரி செல்சியஸ்( இயல்பைவிட 4.3 டிகிரி செல்சியஸ் மிக அதிகம்) பதிவாகியுள்ளது.

இந்நிலையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 11ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழ்நாட்டில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.

The post 11ம் தேதிவரை வெப்பம் அதிகரிக்கும் தமிழ்நாட்டில் 108 டிகிரி வெயில்: 14 இடங்களில் சதம் அடித்தது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...