×

தேர்தல் அறிக்கையில் கூடுதலாக ஒரு வாக்குறுதி கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னைக்கு அடுத்ததாக கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால் பிரசார களம் சூடுபிடித்து வருகிறது. அனைத்து கட்சியின் முக்கிய தலைவர்கள், முன்னாள் இந்நாள் அமைச்சர் உள்பட பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டித் தரவேண்டும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கோரிக்கை வைத்து இருந்தார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ கடந்த சில நாட்களாக, கோவை முழுவதும் நாங்கள் பிரசாரம் செய்தபோது,​​விளையாட்டுகளில் தீவிர ஆர்வமுள்ள பல இளைஞர்களைச் சந்தித்தோம். தடகளம், துப்பாக்கி சுடுதல், கார் பந்தயம், கால்பந்து, ஸ்கேட்டிங், குதிரையேற்றம், குறிப்பாக கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் கோவை இளைஞர்களின் ஆர்வம் ஈடு இணையற்றது. தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் 3 அணிகளின் உரிமையாளர்கள் கோவையைச் சேர்ந்தவர்கள்.

மேலும் வளர்ந்து வரும் கிரிக்கெட் நட்சத்திரங்களில் பலர் மேற்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். கோவை உட்பட ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் மிகப் பெரிய விளையாட்டு உட்கட்டமைப்பு தேவை, கடந்த ஓராண்டாக அதையே தான் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவாக்கி வருகிறார். கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திறமையான வீரர்கள் பலர் உள்ளனர். எனவே, தமிழகத்தில் மற்றொரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு புத்தம் புதிய உலகத்தரம் வாய்ந்த ஸ்டேடியத்தை கோவையில் நிறுவ வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன்.

இந்த அதிநவீன ஸ்டேடியம் சர்வதேச அளவில் கிரிக்கெட் தரத்தை மறுவரையறை செய்வதாக இருக்கும். இந்த ஸ்டேடியம் ஒரு நெட் ஜீரோ ஸ்டேடியமாக உருவாக்கப்படும். இது நமது உள்ளூர் கிரிக்கெட் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது மட்டுமின்றி நீர்-பாதுகாப்பு மற்றும் காலநிலை-உணர்வு ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாகவும் செயல்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், சென்னையைப் போல் கோவையில் உலகத்தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: கிரிக்கெட் மற்றும் விளையாட்டு ஆர்வலராக, எங்கள் 2024 தேர்தல் அறிக்கையில் மற்றுமொரு வாக்குறுதியைச் சேர்க்க விரும்புகிறேன். கோவையில், உலகத்தரத்திலான கிரிக்கெட் மைதானம், அங்கு உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் ஆதரவோடு அமைக்கப்படும்.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குறிப்பிட்டதைப் போல, சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தை அடுத்து, தமிழ்நாட்டின் இரண்டாவது பன்னாட்டு கிரிக்கெட் மைதானமாக இது விளங்கும். நமது திராவிட மாடல் அரசும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியும் திறமையாளர்களை வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டின் விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்.

The post தேர்தல் அறிக்கையில் கூடுதலாக ஒரு வாக்குறுதி கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...