×

முழுமையாக சட்டம் ஒழுங்கு சீர்குலையவில்லை மேற்கு வங்கத்தில் பெரும்பகுதி ரவுடிகள் கட்டுப்பாட்டில் உள்ளது: ஆளுநர் பரபரப்பு பேட்டி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் பூபதி நகரில், நேற்று முன்தினம் வெடிகுண்டு வழக்கில் 2 பேரை கைது செய்ய சென்ற தேசிய புலனாய்ப்பு (என்ஐஏ) அதிகாரிகள் மீது பெண்கள் சிலர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மாநில அரசிடம் ஆளுநர் மாளிகை அறிக்கை கேட்டுள்ள நிலையில், ஆளுநர் ஆனந்த் போஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கம் முழுவதிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையவில்லை.

ஆனால் கணிசமான பகுதிகள் குண்டர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. இதற்கு மாநில அரசு தான் முழு பொறுப்பு என்று சொல்லவில்லை. இதெல்லாம் கடந்த கால மரபுகள். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து சிறு சிறு பகுதிகள் குண்டர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது தொடர்கிறது. இதை மாற்ற வேண்டிய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இதனால் ரவுடிகளின் கட்டுப்பாடு பகுதிகள் அதிகரித்து வருகின்றன.

முதல்வர் மம்தாவுடன் பெரும்பாலான விஷயங்களில் நான் மாற்றுக் கருத்தை கொண்டிருந்தாலும், நாங்கள் நல்ல கண்ணியத்தை பராமரிக்க வேண்டுமென விரும்புகிறோம். சில ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுடன் நெருக்கமாக இருந்து கொண்டு குண்டர்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னை மாநில அரசுக்கு சொந்தமானது. இதனால் ஆளுநர் தலையிடக் கூடாது என்கிறார்கள். இது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விவகாரம் என்பதால் தான் ஆளுநராகிய நான் தலையிட வேண்டியிருக்கிறது.

மாநில நிர்வாகத்தின் தலைவர் ஆளுநர் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நண்பனாகவும், வழிகாட்டியாகவும் இருக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. மாநில அரசின் செயல்பாட்டை எளிதாக்குவதே எனது பணி. மாநில அரசின் செயல்களை முழுமையாக ஆதரிக்கிறேன்.

ஆனால் அவர்கள் என்ன செய்தாலும் எல்லாவற்றையும் ஏற்க முடியாது. கடந்த தேர்தல்களில் வன்முறை சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளது. இது மீண்டும் நடக்காது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. எனவே, வன்முறை நடக்காமல் தடுப்பதற்கான பாதுகாப்பு கட்டமைக்கப்பட வேண்டும். ஆளுநராக, சட்டம் அதன் போக்கில் செல்வதை உறுதி செய்வதே எனது பணி. மக்களுடன் நான் இருக்கிறேன். இவ்வாறு கூறி உள்ளார்.

The post முழுமையாக சட்டம் ஒழுங்கு சீர்குலையவில்லை மேற்கு வங்கத்தில் பெரும்பகுதி ரவுடிகள் கட்டுப்பாட்டில் உள்ளது: ஆளுநர் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Governor ,Kolkata ,National Intelligence ,NIA ,Mundinam ,Bhopati ,East Midnapur district ,Dinakaran ,
× RELATED கொல்கத்தாவில் கவர்னர் மாளிகை முன் பாஜ தர்ணா