×

நீங்க ஓட்டு போட போறீங்களா? வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பற்றி தெரிஞ்சுக்கோங்க..!

புதுடெல்லி: 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவைக்கு வரும் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகளில் 96.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 1.84 கோடி பேர் முதன்முறை வாக்குப் பதிவு செய்ய உள்ளனர். இந்திய ஜனநாயக திருவிழாவில் வாக்காளர்கள் வாக்குரிமையை பதிவு செய்ய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் வரலாறு:

கடந்த 1957ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பிறகு, வாக்குப் பதிவு நேரத்தை மிச்சப்படுத்தவும், வாக்காளர்களின் ஆள்மாறாட்ட முறைகேடுகளை தவிர்க்கவும் நெரிசல் மிக்க நகர்ப்புறங்களில் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்குவது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது. இது 1960ம் ஆண்டு தென்மேற்கு கொல்கத்தாவில் நடந்த மக்களவை இடைத்தேர்தலின்போது சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது. 10 மாதங்கள் கடும் முயற்சிகள் செய்தும், அப்போது மொத்தம் இருந்த 3.42 லட்சம் வாக்காளர்களில் 2.13 லட்சம் வாக்காளர்களை மட்டுமே புகைப்படம் எடுக்க முடிந்தது.

தொடர்ந்து புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை 2.10 லட்சம் பேருக்கு மட்டுமே விநியோகிக்க முடிந்தது. 8 வாக்காளர்களில் 3 பேருக்கு அடையாள அட்டை வழங்க முடியவில்லை. இதையடுத்து தேர்தல் ஆணையம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தது. சுமார் 20 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு, 1979 அக்டோபரில் நடந்த சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் வழங்கப்பட்டன.

தொடர்ந்து அசாம், மேகாலயா, நாகலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. பின்னர், 1994ம் ஆண்டு நாடு முழுவதும் வாக்களார் புகைப்பட அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1995ல் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தங்கள் செய்யப்பட்டு, 1997ல் வாக்காளர் பட்டியலை கணினி மயமாக்கும் பணி நடந்தது. வாக்காளர் பட்டியலில் அடையாள அட்டை எண்ணை சேர்ப்பது பெரும் பணியாக இருந்தது.

அறிமுகப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் ஆனபோதும் இன்றைக்கும் வாக்காளர் அடையாள அட்டையை மட்டும் அடையாள ஆவணமாக பயன்படுத்தி தேர்தலை நடத்த முடியவில்லை. 100 சதவீத வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறியபோதும், அதுஇல்லாதவர்கள் வாக்களிக்க வசதியாக மாற்று ஆவணங்கள் பட்டியலை இந்த முறையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

* மின்னணு அடையாள அட்டை
2021ம் ஆண்டு மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை கொண்டு வரப்பட்டது. இதில் வரிசை எண், பகுதி எண், படம் மற்றும் பிற புள்ளிவிவரங்களுடன் கூடிய க்யூ ஆர் குறியீடு உள்ளது. இந்த மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை மொபைல் அல்லது கணினியில் தரவிறக்கம் செய்து டிஜிட்டல் முறையில் சேமிக்க முடியும்.

The post நீங்க ஓட்டு போட போறீங்களா? வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பற்றி தெரிஞ்சுக்கோங்க..! appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED 1,2ம் கட்ட மக்களவை தேர்தலில் 501 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்