×

மக்களை மனதளவில் மாற்ற செய்யும் உத்தி பாஜ தோல்வி பயத்தால்தான் 400ல் வெற்றி என முழங்குகிறது: கண்ணையா குமார் கணிப்பு

புதுடெல்லி: ‘பாஜ 400 தொகுதிகளில் வெற்றி முழக்கம், மக்களை மனதளவில் மாற்றி யதார்த்தத்தை மாற்ற செய்யும் உத்தி. இது, ஆளுங்கட்சியின் தோல்வி பயத்தை காட்டுகிறது’ என காங்கிரஸ் தலைவர் கண்ணையா குமார் கூறினார். காங்கிரஸ் தலைவரும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவருமான கண்ணையா குமார் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் விளையாட செல்கிறது.

அப்போது என்றைக்காவது 400 ரன் அடிப்போம் என கூறியதுண்டா? நன்றாக விளையாடி கோப்பையை வெல்வோம் என்றுதான் கூறுவார்கள். எனவே 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பாஜ முழக்கமிடுவது, மக்களின் மனதை மாற்றி யதார்த்தத்தை மாற்ற செய்யும் உத்தியை தவிர வேறொன்றுமில்லை. நிஜமாகவே 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பாஜவுக்கு நம்பிக்கை இருந்தால், எதற்காக மற்ற கட்சி தலைவர்களை இழுக்கிறார்கள். நீங்கள் போட்டியில் வெற்றி பெறுவீர்கள் என்றால் எதற்காக ஆஸ்திரேலியா கேப்டனுக்கு லஞ்சம் தரணும்? மற்ற அணி வீரர்களை உங்கள் பக்கம் இழுக்கணும்?

எனவே, இந்த வெற்றி முழக்கம் பாஜவின் தோல்வி பயத்தையும் விரக்தியையும் தான் பிரதிபலிக்கின்றன. அவர்கள் யாரை விமர்சித்தார்களோ, யாரை தேச விரோதி என்றார்களோ, இப்போது அதே நபர்கள் பாஜவில் இருக்கிறார்கள். இதெல்லாம் பாஜவின் வெட்கமின்மையை வெளிப்படுத்துகிறது. மேலும், 400 தொகுதி முழக்கம் ஆயிரம் கேள்விகளை மறைக்க பயன்படுத்தும் முயற்சியும் கூட. ஏனென்றால் பெட்ரோல் ஏன் ரூ.100க்கு அதிகரித்தது என யாரும் கேட்பதில்லையே?

பணவீக்கம் ஏன் அதிகரித்தது? வேலையின்மை வரலாறு காணாத உச்சம் தொட்டது ஏன்? என்றெல்லாம் யாரும் கேட்பதில்லையே. வரலாற்றை அலசிப் பார்த்தால், காந்தியவாதம் பலவீனமடையும் போது, கோட்சேவாதம் பலம் பெற்றிருக்கும். சமத்துவமின்மை மீது ஈர்ப்பு அதிகரித்தால், அம்பேத்கரியம் வலுவிழந்து விடும். எனவே இதெல்லாம் காலத்தின் கோலம். நிச்சயம் நம்பிக்கையுடன் கூறுகிறேன், இந்த நிலை மாற்றத்திற்கு உட்பட்டது என்றார்.

* 2004ல் இப்படியே பேசி தோற்றார்கள்
கண்ணையா குமார் மேலும் கூறுகையில், ‘‘பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டும் என்கிறார்கள். ஆனால் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கியதை பெருமையாக பேசுகிறார்கள். எனவே யதார்த்தத்தை மறைக்க மீண்டும் மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2004ல் வாஜ்பாய் காலத்தில் ‘இந்தியா ஒளிர்கிறது’ எனக் கூறி மக்கள் மனதை திசை திருப்ப பார்த்தார்கள். ஆனால் தேர்தல் முடிவில் பாஜ கூட்டணி தோற்று காங்கிரஸ் வெற்றி பெற்றது. எனவே, இத்தகைய முழக்கங்கள் பாஜவின் தேர்தலை கையாளும் முயற்சிகள்’’ என்றார்.

The post மக்களை மனதளவில் மாற்ற செய்யும் உத்தி பாஜ தோல்வி பயத்தால்தான் 400ல் வெற்றி என முழங்குகிறது: கண்ணையா குமார் கணிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Kannaiya Kumar ,New Delhi ,Bajja ,Congress ,Jawaharlal Nehru University ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்