×

இளைஞர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு கல்லூரி மாணவர்களுக்கு ஏப்.13ல் வினாடிவினா போட்டி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: இளைஞர்களுக்கு தேர்தல் பங்கேற்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் 13ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கு வினாடிவினா போட்டி நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிக்கை: மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இளைஞர்கள் மற்றும் எதிர்கால வாக்காளர்களின் தேர்தல் பங்கேற்பை வலியுறுத்தும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு குறிப்பாக முதல் முறை வாக்காளர்களுக்கும், தேர்தல் நடைமுறையில் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்பை அதிகப்படுத்தும் விதமாகவும் வினாடிவினா நிகழ்ச்சி சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள அம்மா மாளிகையில் வரும் 13ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.

இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் கல்லூரி மாணவர்களும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருநபர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் பெயர், மற்றும் கைபேசி எண் ஆகிய தகவல்களை goalquiz@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யலாம். இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு இணையவழி முன்பதிவு மிகவும் அவசியம். நேரடியாக இப்போட்டியில் பங்கேற்க இயலாது. மேலும் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் பல அணிகளை அனுப்பலாம்.

ஆனால் ஓர் அணி என்பது ஒரே கல்லூரியைச் சார்ந்த 2 மாணவர்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். முதல்நிலைச் சுற்று இணையவழியில் நடத்தப்படவுள்ளதால் பங்கேற்பாளர்கள் அனைவரும் கைபேசி மூலமே பங்கேற்க இயலும். தேர்தல்/ தேர்தல் நடைமுறை மற்றும் பொது அறிவு (முறையே 50%) சார்ந்து வினாடி வினா போட்டிகள் நடைபெறும். பரிசுத் தொகை-முதல் பரிசு- ரூ. 20,000 இரண்டாம் பரிசு – ரூ.10,000/- மூன்றாம் பரிசு- ரூ. 5,000. இப்போட்டி குறித்து எழும் ஐயங்களுக்கு 9840927442 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இளைஞர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு கல்லூரி மாணவர்களுக்கு ஏப்.13ல் வினாடிவினா போட்டி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,Chennai ,Tamil ,Nadu ,Tamil Nadu ,Satyapratha Chagu ,Lok Sabha Public ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...