×

திருநெல்வேலி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ரூ.4 கோடி பறிமுதல்: சென்னையில் இருந்து ரயிலில் கடத்திய உதவியாளர்கள் 3 பேர் கைது, ஓட்டல், உறவினர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

சென்னை: சென்னையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக கட்டுக்கட்டாக கொண்டு சென்ற ரூ.4 கோடி பணத்தை ரகசிய தகவலின் படி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை 6 பைகளில் கொண்டு வந்த ஓட்டல் மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல், உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ரூ.192 கோடி மதிப்புள்ள பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் மூலம் பயணிகள் போல் பல கோடி ரூபாய் ரொக்க பணம் பாஜ போட்டியிடும் தொகுதிகளுக்கு கடத்தப்படுவதாக மாநில உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

குறிப்பாக நேற்று முன்தினம் பாஜ நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் கோவை மற்றும் நெல்லைக்கு பல கோடி ரூபாய் சென்னையில் இருந்து ரயில் மூலம் கொண்டு செல்வதாக மாநில உளவுத்துறை அதிகாரிகளுக்கு நம்பகமான தகவல் கிடைத்தது. உடனே அதுகுறித்து தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் அளித்தனர். ஆனால், தேர்தல் பறக்கும் படையினர் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சற்று தாமதமாக வந்ததால், வழக்கமாக எழும்பூரில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு சென்றது.

உடனே தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் மாநகர காவல் எல்லையில் உள்ள தேர்தல் பறக்கும் படையினருக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பல கோடி ரூபாய் கடத்தப்படுவதாகவும், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் குறிப்பாக எஸ்7 பெட்டியில் சோதனை நடத்தும்படியும் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தாம்பரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரி செந்தில் பாலமணி தலைமையிலான அதிகாரிகள், அவசர அவசரமாக தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து, ரயில்வே போலீசார் மற்றும் தாம்பரம் போலீசார் உதவியுடன் இரவு 8.40க்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, எஸ்7 பெட்டியில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை ஒவ்வொன்றாக சோதனை செய்தனர். பயணிகள் யாரையும் இறங்க விடாமல் சோதனை நடத்தப்பட்டது. அதில் 3 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் 6 பைகளை அவசர அவசரமாக இருக்கைக்கு அடியில் மறைத்தனர். இதை பார்த்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி செந்தில் பாலமணி, அந்த 3 பேர் கொண்டு வந்த 6 பைகளை கைப்பற்றி சோதனை செய்த போது, அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே பணத்தை கொண்டு வந்த 3 பேரையும் பிடித்தனர்.

மேலும், பணத்துடன் 6 பைகளையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சன் அலுவலகத்திற்கு எடுத்து சென்று பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு வீடியோ பதிவுடன் 2 மணி நேரத்திற்கு மேல் பணம் எண்ணப்பட்டது. அதில் மொத்தம் ரூ.3.99 கோடி இருந்தது தெரியவந்தது.பணத்தை கொண்டு வந்த 3 பேரையும் தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் மாநகர இணை கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் பவன்குமார், தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது, நெல்லை பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான கீழ்ப்பாக்கத்தில் உள்ள ப்ளு டைமண்ட் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வரும் சென்னை கொளத்தூர் திருவிக நகரை சேர்ந்த பாஜ நிர்வாகி சதீஷ்(33), அவரது தம்பி நவீன் (31), ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள்(25) என்பது தெரியவந்தது. ஓட்டல் மேலாளர் சதீஷ் பாஜக உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே ரூ.3.99 கோடி பணம் யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என்று 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்திய போது, நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தனர். பணம் யார் கொடுத்து அனுப்பினர் என்று விசாரணை நடத்திய போது, நயினார் நாகேந்திரன் நெருங்கிய உறவினரான சாலிகிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் பணத்தை கொடுத்து, திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இறங்கியதும், நயினார் நாகேந்திரன் பணத்தை பெற்று செல்ல ஆட்களை அனுப்புவார் அவர்களிடம் கொடுக்கும் படி அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர்.

இதுபோல் கடந்த ஒரு வாரத்தில் 2 முறைக்கு மேல் பணத்தை கொண்டு சென்றதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பணம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. அதன் பின்னணி என்ன என்பது குறித்து 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், பறிமுதல் செய்யப்பட்ட பணம், தாம்பரம் காவல்நிலையத்தில் உதவி கமிஷனர் நெல்சன் அறையில் வைத்து வருவாய் துறையினர் முன்னிலையில் தாம்பரம் வட்டாட்சியர் நடராஜனிடம் ஒப்படைக்கப்பட்டு, அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டது.

ஆவணமின்றி ரூ.10 லட்சத்திற்கு மேல் கொண்டு வந்தால், பறக்கும் படையினர் முறையாக வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும். அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் ரூ.3.99 கோடி பிடிபட்டது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் அளித்தனர். பிடிபட்ட 3 பேர் அளித்த வாக்குமூலத்தின்படி, வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று கீழ்ப்பாக்கம் புரசைவாக்கம் சாலையில் உள்ள நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ‘ப்ளூ டைமண்ட்’ ஓட்டல் மற்றும் அவரது நெருங்கிய உறவினரான சாலிகிராமத்தில் வசித்து வரும் முருகன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

ப்ளூ டைமண்ட் ஓட்டலில் ஒவ்வொரு அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை தொடர்பான விவரங்களை அதிகாரிகள் வெளியே கசிய விடவில்லை. இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆளும் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. சென்னையில் இருந்து ரயில் மூலம் நெல்லை பாஜக வேட்பாளருக்கு கட்டுக்கட்டாக கடத்திய ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை நடந்த சோதனையில் இந்த அளவுக்கு பணம் ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது. உடனடி ஜாமீன்: சட்டவிரோதமாக ரயிலில் பணம் கொண்டு சென்ற 3 பேர் மீதும், தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து, தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வர்ஷா 3 பேரும் தினமும் தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் உடனடி ஜாமீன்
வழங்கினார்.

* பாஜ வேட்பாளர்களுக்கு ஹவாலா மூலம் பணம் விநியோகம்
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் நெல்லை மற்றும் கோவைக்கு பணம் கடத்தப்படுவதாக தேர்தல் பறக்கும் படைக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. நெல்லைக்கு கடத்தப்பட்ட பணத்தை விரைந்து செயல்பட்டு பறிமுதல் செய்தனர். ஆனால் கோவைக்கு சென்னையில் இருந்து கடத்தப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. நயினார் நாகேந்திரனுக்கு நேரடியாக பணம் சென்றது போல, மேலும் சில பாஜ வேட்பாளர்களுக்கு ஹவாலா வழியில் பணம் சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

* ஆதரவாளர்கள் வீட்டில் பரிசுப்பொருட்கள், ரூ.6 லட்சம் பறிமுதல்
நெல்லை குறிச்சி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கணேஷ்மணி (54), இவர் நெல்லையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனை மேலாளர். பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளரான இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாளை பிடிஓ பொன்ராஜ் தலைமையிலான பறக்கும் படையினர் கணேஷ்மணி வீட்டில் சோதனை நடத்தினர்.

இதில் ரூ.2 லட்சம் மற்றும் 100 வெள்ளை வேட்டிகள், கலர் வேட்டிகள், வெள்ளி பரிசு பொருட்கள், நைட்டிகள் 45, வெளிநாட்டு மதுபானங்கள் 25, டின் பீர் 16 மற்றும் கடந்த 28-1-2023ல் திருமணம் நடந்த ஒரு திருமண தாம்பூலத்திற்கான பைகள் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.2 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்கள், வேட்டிகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்
செய்தனர்.

நெல்லையைச் சேர்ந்தவர் குணசேகரன். பிரபல ஓட்டல் உரிமையாளர். பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமானவர். இவரது வீட்டில் நேற்று நெல்லை வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அங்கிருந்து ரூ.3.72 லட்சத்தை கைப்பற்றினர்.

ஆவணங்களை சமர்ப்பித்ததும் பணத்தை மீண்டும் குணசேகரனிடமே வழங்கியதாக கூறப்படுகிறது. நெல்லை வண்ணார்பேட்டை பரணிநகரில் வசித்து வரும் பாஜ வேட்பாளர் நயினார்நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

The post திருநெல்வேலி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ரூ.4 கோடி பறிமுதல்: சென்னையில் இருந்து ரயிலில் கடத்திய உதவியாளர்கள் 3 பேர் கைது, ஓட்டல், உறவினர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Tirunelveli ,Nayinar Nagendran ,Chennai ,Election Flying Force ,Baja ,
× RELATED நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம்...