×

தேர்தல் பிரசாரத்திற்கு குறுகிய நாட்களே உள்ளதால் மோடி, ராகுல் அடுத்தடுத்து தமிழகம் வருகை: ரோடு ஷோ, பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கின்றனர்

சென்னை: தேர்தல் பிரசாரத்திற்கு குறுகிய நாட்களே உள்ளதால் மோடி, ராகுல் அடுத்தடுத்து தமிழகம் வர உள்ளனர். ரோடு ஷோ, பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கின்றனர். முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் தேசிய தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடி 6வது முறையாக 2 நாள் பயணமாக வருகிற 9ம் தேதி(நாளை மறுநாள்) தமிழகம் வருகிறார். அதாவது 9ம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி, மாலையில் அங்கிருந்து விமானப் படை விமானம் மூலம் சென்னை வருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு கிண்டி, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் வழியாக ஜி.என்.செட்டி ரோடு வழியாக பனகல் பார்க் வருகிறார். அங்கிருந்து ரோடு ஷோ தொடங்குகிறது. பாண்டிபஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை இந்த ரோடு ஷோ நடக்கிறது. தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ் செல்வம் (மத்திய சென்னை), பால்கனகராஜ் (வடசென்னை) ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார். ரோடு ஷோ நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் மோடி கிண்டி கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார். மறுநாள் 10ம் தேதி காலையில் சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர், செல்கிறார்.

காலை 10.30 மணிக்கு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் 11.50 மணிக்கு சென்னை வருகிறார். சென்னையில் இருந்து விமானப்படை விமானம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு செல்கிறார். அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர் மோடி நீலகிரி தொகுதி பா.ஜனதா வேட்பாளரான மத்திய மந்திரி எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு கோவை திரும்பும் பிரதமர் மோடி விமானப்படை விமானம் மூலம் மகாராஷ்டிர மாநிலம் செல்கிறார். இதே போல ஒன்றிய அமைச்சர்களும் தமிழகத்தை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக வர உள்ளனர். மேலும் பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் வர உள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 12ம் தேதி தமிழகம் வர உள்ளார். அன்றைய தினம் திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ராபர்ட் புருஸை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து அன்று மாலை கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்தியும் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகின்றனர்.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் ஆகியோர் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், இந்த பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ள நிலையில் தேசிய தலைவர்கள் அடுத்தடுத்து, தமிழகத்திற்கு வர உள்ளதால் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

The post தேர்தல் பிரசாரத்திற்கு குறுகிய நாட்களே உள்ளதால் மோடி, ராகுல் அடுத்தடுத்து தமிழகம் வருகை: ரோடு ஷோ, பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கின்றனர் appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahul ,Tamil Nadu: Road Show ,Ramanta General Assembly ,Chennai ,Tamil Nadu ,
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...