சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் இருந்து நடிகை குஷ்பு திடீரென விலகியுள்ளார். இதுதொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். தமிழக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் திடீரென பிரசாரத்தில் இருந்து விலகி கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு குஷ்பூ எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
டெல்லியில் 2019ம் ஆண்டு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தைத் தொடர்ந்து, எனக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த 5 ஆண்டுகளாக என்னை மிகவும் பாதிப்படைய செய்தது. இதனை தொடர்ந்து பல்வேறு சிகிச்சை அளித்தாலும் குணமடையவில்லை. இதன்காரணமாக தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று எனது மருத்துவக் குழு எனக்கு கண்டிப்பாக அறிவுறுத்தியது. இருந்த போதும் அதனை புறக்கணித்து பாஜகவின் காரியகர்த்தாவாக தொடர்ந்து பிரசாரம் செய்தேன். மருத்துவரின் அறிவுரைக்கு எதிராக தொடர்ந்து பிரசாரம் செய்ததால் வலி மற்றும் வேதனை அதிகரித்துள்ளது. உடல்நிலையும் மோசம் அடைந்துள்ளது. நீண்ட தூர பயணங்கள் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, இவை இரண்டும் தேர்தல் பிரசாரத்தில் முக்கியமானவை.
எனவே கனத்த இதயத்துடன், தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் நான் தீவிரமாக பங்கேற்பதற்கு ஒரு இடைநிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் என்னால் முடிந்த பங்களிப்பை செய்ய முடியவில்லை என்ற எண்ணம் ஆழ்ந்த மனவருத்தத்தை அளிக்கிறது. இருப்பினும் எனது சமூக வலைதளம் மூலம் பாஜகவின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலம் நான் தொடர்ந்து ஆதரவளிப்பேன். பிரசாரத்தின் ஒரு பகுதியாக இருப்பேன். பிரதமர் மோடி தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்பதையும் நான் எங்கிருந்தாலும் உரத்த குரலில் ஆரவாரம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் இருந்து நடிகை குஷ்பு திடீர் விலகல்: பாஜக தேசிய தலைவருக்கு பரபரப்பு கடிதம் appeared first on Dinakaran.