×

தஞ்சாவூர் அருகே கோடைநெல் சாகுபடி தீவிரம்


தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பாச்சூர் பகுதியில் கோடை நெல் சாகுபடி பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. நடவு பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காததால் அதிக செலவு ஏற்படுவதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் கோடை நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. டெல்டா மாவட்ட பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். அதன்படி கடந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பயிர்கள் நன்கு வளர்ந்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து பல்வேறு சிரமங்களுக்கு இடையே பயிர்களை காப்பாற்றி அறுவடை செய்து முடித்துள்ளனர். தற்போது தஞ்சாவூர் பகுதியில் மின்மோட்டார் வசதி உடைய விவசாயிகள் குறுகிய கால பயிரான கோடை நெல் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்குழாய்களில் மின் மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து நிலங்களை தயார் செய்துள்ள விவசாயிகள் பாய் நாற்றங்கால் அமைத்து நடவு பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் விவசாய கூலி தொழிலாளர்களை வைத்து நடவுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நடவு பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பது தட்டுப்பாடு ஏற்படுவதுடன் அதிகப்படியான செலவும் நேர விரயமும் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

The post தஞ்சாவூர் அருகே கோடைநெல் சாகுபடி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Bachur ,Nagapattinam ,Tiruvarur ,Mayiladuthurai ,Samba ,
× RELATED தஞ்சாவூர் அருகே கோடைநெல் சாகுபடி தீவிரம்