×

நெல்லை ரயிலில் சிக்கிய ரூ4 கோடி; பாஜ வேட்பாளரின் பணமா?… 3 பேரிடம் போலீசார் விசாரணை

தாம்பரம்: நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று ரூ.3.99 கோடி பணம் சிக்கியது. அது நெல்லை தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்ட பணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு புறப்பட்டு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் செலவிற்கு பாஜவினர் பணம் கொண்டு செல்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பெயரில் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை தேர்தல் பறக்கும் படையினர், தாம்பரம் ரயில்வே போலீசார் மற்றும் தாம்பரம் போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.

அப்போது ரயிலில் மூன்று பைகளுடன் இருந்த மூவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்து பார்த்தனர். அப்போது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் பிடித்த போலீசார் பண மூட்டைகளுடன் அவர்களை தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். காவல் நிலையத்தில் வைத்து பணம் மூட்டையை எண்ணிப் பார்த்த போது அதில் ரூ.3.99 கோடி பணம் இருந்ததாகவும், பணத்தை வைத்திருந்த நபர்கள் பாஜ உறுப்பினர் அட்டைகள் வைத்திருந்ததும் தெரிய வந்தது.

மேலும் அந்த பணம் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் போலீசார் விசாரணையில் பிடிபட்ட மூன்று பேரும் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் பிடிபட்ட நபர்களிடம் பணத்தை யாரிடம் இருந்து எந்த பகுதியில் இருந்து பெற்று வந்தார்கள் என்றும், கொண்டு செல்லும் பணத்தை யாரிடம் ஒப்படைக்க இருந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நெல்லை ரயிலில் சிக்கிய ரூ4 கோடி; பாஜ வேட்பாளரின் பணமா?… 3 பேரிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Baja ,Tambaram ,Paddy Express ,Nella ,Nayinar Nagendran ,Chennai ,Bahia ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...