×

கோயில் சொத்தை பாதுகாக்காத விவகாரம் அதிகாரிகள் மீதான சிபிஐ விசாரணை உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

 

சென்னை, ஏப். 7: கோயில் சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கம் காலனியை சேர்ந்த சித்ரா சீனிவாசன் என்பவர், நந்தம்பாக்கத்தில் தான் வாங்கிய நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக ஆலந்தூர் சார்பதிவாளரை அணுகியுள்ளார்.

ஆனால், நந்தம்பாக்கம் ராமர்கோயில் தெருவில் உள்ள அந்த நிலம் தொடர்பாக அறநிலையத்துறையின் தடையில்லா சான்று இல்லாததால் பதிவு செய்ய ஆலந்தூர் சார்பதிவாளர் மறுத்துவிட்டார். இதை எதிர்த்து சித்ரா சீனிவாசன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த நிலம் கோதண்டராமர் கோயிலுக்கு சொந்தமானது என்று அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், குறிப்பிட்ட அந்த நிலம் கோதண்டராமர் கோயிலுக்கு சொந்தமானதா, இல்லையா என்பது தொடர்பாக கோயில் நிர்வாகம் தரப்பில் எந்த ஆவணங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, கோயிலுக்கு சொந்தமான சொத்துகள் குறித்த பதிவேட்டை முறையாக பராமரிக்காத, பாதுகாக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிந்து சிபிஐ விசாரணை நடத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் முன்பு அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில் சொத்துகள் பாதுகாக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்து சிபிஐ விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், கோயில் நிர்வாகம் தரப்பில் அளித்த உத்தரவாதத்தை ஏற்று சிபிஐ விசாரணை நடத்தும்படி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

The post கோயில் சொத்தை பாதுகாக்காத விவகாரம் அதிகாரிகள் மீதான சிபிஐ விசாரணை உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : CBI ,Madras High Court ,Chennai ,Chennai Nandambakkam Colony ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...