ஒடுகத்தூர், ஏப்.7: ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் நுழைந்து 2 மான்களை வேட்டையாடி வீட்டில் சமைத்த அண்ணன், தம்பி மீது 3 பிரிவுகளின் கீழ் வனத்துறையினர் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் அருகே உள்ள தாழைமேடு கிராமத்தில் மான்களை வேட்டையாடி வீட்டில் சமைத்து கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட வன அலுவலர் குருசாமி பேலா உத்தரவின் பேரில் வனச்சரகர் அலுவலர் இந்து தலைமையிலான வனத்துறையினர் நேற்று அப்பகுதியில் உள்ள வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வனத்துறையினரை பார்த்து 2 வாலிபர்கள் கையில் சாக்கு பையுடன் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். அவர்களை வனத்துறையினர் துரத்தி பிடிக்க முயன்றும் முடியவில்லை. பின்னர், தப்பியோடியவர்களின் வீட்டில் சோதனை செய்த போது அங்கு 2 புள்ளி மான்கள் வேட்டையாடப்பட்டு அதன் தோல், தலை மட்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மாமிசத்தை அந்த இருவரும் சாக்கு பையில் எடுத்து சென்று விட்டது தெரிய வந்தது.
மேலும், வேட்டையாடப்பட்ட மான்களின் சிறிது இறைச்சி மட்டும் அங்கு சமைக்கப்படு இருந்தது. அதனை கைப்பற்றிய வனத்துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். விசாரணையில், தப்பியோடிய இருவரும் அதே கிராமத்தை சேர்ந்த தாமோதரன் மகன்கள் மணி(30), லட்சுமணன்(28) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, வனத்துறையினர் சட்டவிரோதமாக வனப்பகுதியில் நுழைந்தது, மான்களை வேட்டையாடி கொன்றது. அதன் மாமிசத்தை சமைத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தப்பியோடிய அண்ணன், தம்பியை வலை வீசி தேடி வருகின்றனர். ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் நுழைந்து 2 மான்கள் வேட்டையாடி அதன் மாமிசத்தை சமைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் நுழைந்து 2 மான்களை வேட்டையாடி வீட்டில் சமைத்த அண்ணன், தம்பி appeared first on Dinakaran.