×

ராஜஸ்தானுக்கு 4வது வெற்றி: விராத் கோஹ்லி சதம் வீண்

ஜெய்பூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்தது. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராயல்ஸ் பந்துவீசியது. கோஹ்லி, டு பிளெஸ்ஸி இணைந்து ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 125 ரன் சேர்த்தது. வலுவான அடித்தளம் அமைத்தது. நடப்பு சீசனில் ஆர்சிபி அணியின் முதல் 100 ரன் பார்ட்னர்ஷிப் இது.

டு பிளெஸ்ஸி 44 ரன் (33 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சாஹல் சுழலில் பட்லர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 1 ரன் மட்டுமே எடுத்து பர்கர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். சவுரவ் சவுகான் 9 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அபாரமாக விளையாடிய கோஹ்லி சதம் விளாசிஅசத்தினார். ஆர்சிபி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. கோஹ்லி 113 ரன் (72 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்), கிரீன் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ராஜஸ்தான் பந்துவீச்சில் சாஹல் 2, பர்கர் 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன் எடுத்து,5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடைசி ஓவரின் முதல் பந்தில் சதத்தை நிறைவு செய்த ஜோஸ் பட்லர் வெற்றியை வசப்படுத்தினார். இது அவரது 100 வது ஐபிஎல் போட்டி ஆகும்.

ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 100 ரன் (58 பந்து,9 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். சஞ்சு சாம்சன் 69 ரன், ஷிம்ரன் ஹெட்மயர் 11 ரன் எடுத்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் ரிசே டோப்லி 2 விக்கெட், யஷ் தயாள் 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் 8 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

* ஐபிஎல் தொடரில் கோஹ்லி தனது 8வது சதத்தை நேற்று பதிவு செய்தார்.

* கடைசியாக விளையாடிய 7 ஐபிஎல் இன்னிங்சில் கோஹ்லி 3 சதங்களை விளாசி உள்ளார்.

* ஐபிஎல் போட்டிகளில் 7500 ரன் என்ற சாதனை மைல் கல்லையும் கோஹ்லி நேற்று கடந்தார்.

The post ராஜஸ்தானுக்கு 4வது வெற்றி: விராத் கோஹ்லி சதம் வீண் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Virat Kohli ,Jaipur ,Rajasthan Royals ,IPL league ,Royal Challengers Bangalore ,Sawai Mansingh Stadium ,Royals ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...