×

மே.வங்கத்தில் கிராமத்து பெண்கள் அதிரடி அதிகாலையில் திடீரென வீடு புகுந்த என்ஐஏ அதிகாரிகள் மீது தாக்குதல்: வாகனம் சேதம், ஒருவருக்கு காயம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வழக்கு ஒன்றில் 2 பேரை கைது செய்ய அதிகாலையில் திடீரென வீடு புகுந்ததால் என்ஐஏ அதிகாரிகள் மீது கிராமத்து பெண்கள் உருட்டுக்கட்டையுடன் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் பூபதிநகர் பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி குடிசை வீடு ஒன்றில் பயங்கர சத்தத்துடன் வெடிபொருள் வெடித்தது.

முதலில் மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணைக்கு மாற்றப்பட்டது. வெடிபொருள் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் புதிதாக வழக்கு பதிவு செய்த என்ஐஏ, இதுதொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 8 பேருக்கு சம்மன் அனுப்பியது. இதனால் இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் பெற்றது.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேரை கைது செய்ய என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் பூபதிநகர் பகுதி கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, வீடு புகுந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் ஒன்றுகூடினர். சிலர் உருட்டுக்கட்டைகளுடன் அதிகாரிகளை விரட்டி அடித்தனர். சிலர் என்ஐஏ அதிகாரிகள் வந்த கார் மீது கற்களை வீசினர்.

இதற்கிடையே, குற்றவாளிகள் பலாய் சரண் மெய்தி, மனோபிரதா ஜனா ஆகிய 2 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து, பூபதிநகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், ‘‘குற்றவாளிகள் இருவரும் பெட்ரோல் குண்டு தயாரித்து விற்கும் செயலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர். அவர்களை தேடி 5 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது கைதான 2 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் சூழ்ந்து தாக்கினர். இதில் அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. எங்கள் வாகனம் சேதமடைந்தது. இந்த தாக்குதல் தொடர்பாக பூபதிநகர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது’’ என்றார். கடந்த ஜனவரி 5ம் தேதி சந்தேஷ்காலி பகுதியில், ரேஷன் ஊழல் தொடர்பான விசாரணைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் கும்பலால் தாக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது என்ஐஏ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* நள்ளிரவில் அத்துமீறினால் வேடிக்கை பார்ப்பார்களா?
இந்த விவகாரம் தொடர்பாக பலூர்காட் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘இந்த சம்பவம் பூபதிநகர் பெண்களால் நடக்கவில்லை. இதற்கு காரணம் என்ஐஏ அதிகாரிகள்தான். அவர்கள் தாக்குதல் நடத்தினால், பெண்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா? அதுவும் நள்ளிரவில் வீடு புகுந்துள்ளனர்.

யாராவது நள்ளிரவில் வீடு புகுந்தால் சும்மா விடுவார்களா? இந்த சோதனை தொடர்பாக உள்ளூர் பகுதி காவல் நிலையத்திலும் என்ஐஏ தகவல் தெரிவிக்கவில்லை. தேர்தல் வெற்றிக்காக மத்திய விசாரணை அமைப்புகளை ஒன்றிய பாஜ அரசு பயன்படுத்துகிறது. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

* சீரியசாக கையாளணும் மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் கூறுகையில், ‘‘இது மிகவும் சீரியசான விவகாரம். இதை மிகவும் சீரியசாக கையாள வேண்டும்’’ என்றார்.

The post மே.வங்கத்தில் கிராமத்து பெண்கள் அதிரடி அதிகாலையில் திடீரென வீடு புகுந்த என்ஐஏ அதிகாரிகள் மீது தாக்குதல்: வாகனம் சேதம், ஒருவருக்கு காயம் appeared first on Dinakaran.

Tags : West Bengal ,NIA ,Kolkata ,East Midnapore, West Bengal State ,Dinakaran ,
× RELATED கடும் வெப்ப அலை: மேற்கு வங்க பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை