×

மனைவி காங். எம்எல்ஏ என்பதால் வீட்டை விட்டு வெளியேறிய பகுஜன் சமாஜ் வேட்பாளர்

பாலாகாட்: மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட் மக்களவை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பவர் கங்கர் முஞ்சாரே. இவரது மனைவி அனுபா முஞ்சாரே. இவர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ. மபி சட்டப்பேரவைக்கு 2023 நவம்பரில் நடந்த தேர்தலில் பாலகாட் சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ வேட்பாளர் கவுரிசங்கர் பிசனை தோற்கடித்து வெற்றி பெற்றார். அனுபா தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். ஆனால் கணவர் கங்கர் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர்.

தற்போது மக்களவை தேர்தலில் பாலகாட் வேட்பாளராகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அங்கு ஏப்.19ம் தேதி தேர்தல் நடப்பதால் இருவரும் தங்கள் கட்சிகளுக்கு வாக்குசேகரிக்கும் பணியை தொடங்கி உள்ளனர். இருவரும் வேறு வேறு சித்தாந்தங்கள் கொண்டவர்கள். அதிலும் மனைவி அனுபா அந்த தொகுதி எம்எல்ஏவாக இருப்பதால் இருவரும் வீட்டில் தங்கக்கூடாது என்று கூறி கங்கர் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் கூறுகையில்,‘மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக எனது வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வசித்து வருகிறேன்.

வெவ்வேறு சித்தாந்தங்களைப் பின்பற்றும் இருவர் ஒரே வீட்டில் வாழ்ந்தால், மக்கள் அதை மேட்ச் பிக்சிங் என்று நினைப்பார்கள். ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து வீடு திரும்புவேன்’ என்றார். கணவர் கங்கரின் நடவடிக்கையால் தனது மனம் காயம் அடைந்துள்ளதாக அனுபா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,’ நான் பாலகாட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டபோது, ​​நாங்கள் ஒன்றாகத் தங்கியிருந்தோம். நாங்கள் திருமணமாகி 33 ஆண்டுகளாக எங்கள் மகனுடன் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். ஆனால் மக்களவை தேர்தல் எங்களை பிரித்து விட்டது’ என்றார்.

The post மனைவி காங். எம்எல்ஏ என்பதால் வீட்டை விட்டு வெளியேறிய பகுஜன் சமாஜ் வேட்பாளர் appeared first on Dinakaran.

Tags : Kong ,Bakujan Samaj ,MLA ,Balaghat ,Kangar Munjare ,Bagajan Samaj Party ,Madhya Pradesh ,Lok Sabha ,Anuppa Munjare ,Congress MLA ,Mabi Legislature ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...