ஜெய்ப்பூர்: ‘பிரதமர் மோடி நாட்டின் கண்ணியத்தையும், ஜனநாயகத்தையும் அழித்து விட்டார். எதிர்க்கட்சி தலைவர்களை பாஜவில் சேர வைக்க மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன’ என ஜெய்ப்பூர் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடுமையாக தாக்கி பேசினார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியின் 5 நீதிகள் மற்றும் 25 உத்தரவாதங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கை தொடர்பான விளக்க பொதுக்கூட்டம் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் நேற்று நடந்தது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் மாநில தலைவர் கோவிந்த் சிங், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் பேசினர்.
இதில், சோனியா காந்தி பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக வேலையின்மை, பணவீக்கம், பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மையை ஊக்குவிக்க எந்த ஒரு சிறு வாய்ப்பையும் விட்டுவைக்காத அரசின் கைகளில் நாடு இருக்கிறது. இன்று நமது நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. ஜனநாயக அமைப்புகள் அழிக்கப்பட்டு, அரசியல் சாசனத்தை மாற்ற சதி நடக்கிறது. இது சர்வாதிகாரம். இதற்கு நாம் அனைவரும் இணைந்து பதிலளிப்போம். இந்த நாடு சிலரின் சொத்து அல்ல, அனைவருக்கும் சொந்தமானது. இந்த தேசத்திற்காக நம் முன்னோர்கள் ரத்தம் சிந்தியுள்ளனர். ஆனால், தன்னை பெரிதாக கருதி பிரதமர் மோடி நாட்டின் கண்ணியத்தையும், அதன் ஜனநாயகத்தையும் அழித்து வருகிறார். ஒட்டுமொத்த அரசு அமைப்புகளிலும் அச்சம் நிறுவப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டி பாஜவில் சேர வைக்க பல்வேறு உத்திகள் கையாளப்படுகின்றன. இவ்வாறு சோனியா பேசினார். முன்னாக பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ‘‘சிலரை ஊழல்வாதிகள் என குற்றம்சாட்டி அவர்களை தங்கள் கட்சிக்கு பாஜ இழுத்துக் கொள்கிறது.
பாஜவில் சேர்ந்ததும் அவர்களின் ஊழல் கறை சுத்தமாகி விடுகிறது. அதன்பின் அதைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள். இன்று மிகப்பெரிய தொழிலதிபர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இந்த நாட்டின் சொத்துகள் பெரும் தொழிலதிபர்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது. ஒருபுறம் விவசாயிகள் வாழ வழியின்றி தற்கொலை செய்து கொள்ளும் நிலையில், கோடீஸ்வரர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. ரேஷனில் 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்கும் அரசு, வேலைவாய்ப்பை தர மறுக்கிறது. எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் வாழ்க்கையில் அநீதி நடக்கிறது. இங்கு ஏழைகள், பலவீனமானவர்கள், தொழிலாளிகள் குரல் கேட்காது. நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கைக்கு நீதி பத்திரம் என பெயரிட்டுள்ளோம். இது நீதியை கேட்டும் தேசத்தின் குரல்’’ என்றார்.
உலகின் பெரிய ஊழல் தேர்தல் பத்திரங்கள்
தெலங்கானாவின் ஐதராபாத்தில் நேற்று நடந்த தேர்தல் அறிக்கை விளக்க பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: மோடி அரசு பதவியேற்ற பிறகு, நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ஏழைகளாக மாறியுள்ளனர். நாடு முழுவதும் தினமும் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். விவசாயிகள் கடனில் இதுவரை ஒரு ரூபாய் கூட ஒன்றிய பாஜ அரசு தள்ளுபடி செய்யவில்லை. ஆனால் பணக்கார தொழிலதிபர்களின் ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருக்கிறார்கள். உலகிலேயே மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நடந்திருக்கிறது.
காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இளைஞர்கள், பெண்கள் உட்பட 5 பிரிவினருக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான நீதியின் மூலம் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும். எங்களின் தேர்தல் அறிக்கை இந்தியர்களின் குரலாக பிரதிபலிக்கிறது. தெலங்கானா மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றி வருகிறது. ஏற்கனவே தெலங்கானா மாநில அரசு 30,000 அரசு வேலைகளை நிரப்பி உள்ளது. மேலும் 50,000 காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி பாஜவில் சேர வைக்கின்றனர்; ஜனநாயகத்தை அழித்து விட்டார் மோடி: ஜெய்ப்பூர் பிரசார கூட்டத்தில் சோனியா காந்தி கடும் தாக்கு appeared first on Dinakaran.