×

தமிழகம் முழுவதும் நேற்று 2வது நாளாக 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று 2வது நாளாக 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணப் பட்டுவாடாவை தடுத்து நிறுத்துவதற்காக நேற்று முன்தினம் தமிழகத்தில் 44 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்று 2வது நாளாக 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். குறிப்பாக,கோவை லட்சுமி மில்ஸ் அருகே அவிநாசி ரவி என்பவரின் அலுவலகம், ராம் நகர் பி.எஸ்.கே அலுவலகம், அவிநாசியில் உள்ள குடிநீர் ஒப்பந்ததாரர் வேலுமணியின் அலுவலகம் என 3 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் காலை முதல் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்றும் 2வது நாளாக நடைபெற்றது.

அதேபோல் சென்னை அடையாறில் அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அபிராமபுரத்தில் ஓய்வுபெற்ற செயற்பொறியாளர் தங்கவேலு வீடுகளிலும், சென்னை திருவான்மியூரில் அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் தொடர்புடைய இடங்களிலும் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நெல்லை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் அலுவலகம்,ஈரோட்டில் சத்தியமூர்த்தி என்பவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் 2வது நாளாக சோதனை நடைபெற்றது. இதில் சில முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post தமிழகம் முழுவதும் நேற்று 2வது நாளாக 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Income tax department ,Tamil Nadu ,Chennai ,Lok Sabha elections ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...