×

பணப்பட்டுவாடா புகார் எதிரொலி!: சென்னை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை..!!

சென்னை: சென்னை, நெல்லை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பணப்பட்டுவாடா தொடர்பாக புகாரின் தொடர்ச்சியாக நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலின் பேரில் தமிழகம் முழுவதும் அரசு ஒப்பந்ததாரர், தனியார் நிறுவன அதிகாரிகள் உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

இந்நிலையில், சென்னை, நெல்லை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை திருவான்மியூரில் அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன், அபிராமபுரத்தில் ஓய்வுபெற்ற செயற் பொறியாளர் தங்கவேலு வீடுகளில் 2வது நாளாக தீவிர சோதனை நடத்தப்படுகிறது. நேற்று தங்கவேலு இல்லத்தில் நடைபெற்ற சோதனையில் 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நெல்லை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் அலுவலகத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

ஈரோட்டில் சத்தியமூர்த்தி என்பவரது கட்டுமான நிறுவன அலுவலகம், வீடு உள்ளிட்ட 3 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களிடம் பணப்பட்டுவாடா தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள் உள்ளனவா? அல்லது தேர்தலுக்கு கொடுப்பதற்காக பணம் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளார்களா? உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறையினர் தீவிரமாக சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனை நிறைவடைந்த பின்னர், இவர்களின் வீடுகள் மற்றும் அலுவலங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு? ஆவணங்கள் ஏதேனும் சிக்கியுள்ளதா? என்பது குறித்து வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பணப்பட்டுவாடா புகார் எதிரொலி!: சென்னை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai, Nellai ,CHENNAI ,Income Tax Department ,Nellai ,Erode ,Dinakaran ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...