×

அமெரிக்க வரலாற்றில் 3-ஆவது சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. நியூயார்க்கில் 4.0 என்ற ரிக்டரில் 9.7 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவு..!!

வாஷிங்டன்: அமெரிக்காவை அடுத்தடுத்து தாக்கிய இரண்டு நிலநடுக்கங்களால் நியூயார்க், நியூ ஜெர்சி உள்ளிட்ட சில நகரங்களில் கட்டடங்கள் குலுங்கின. அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் அரிதிலும், அரிதாகவே நிலநடுக்கம் ஏற்படும். இந்த நிலையில் நியூயார்க், நியூ ஜெர்சி உள்ளிட்ட நகரங்களை அடுத்தடுத்து தாக்கிய இரண்டு நிலநடுக்கங்களால் மக்கள் அச்சம் அடைந்தனர். வெள்ளி கிழமை காலை நியூ ஜெர்சி நகரத்தில் 4.8 என்ற ரிக்டர் அளவில் 4.7 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதை தொடர்ந்து மாலை நேரத்தில் நியூயார்க் நகரம் அருகே 4.0 என்ற ரிக்டர் அளவில் 9.7 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்களால் நியூயார்க், நியூ ஜெர்சி மட்டுமின்றி வாஷிங்டன் நகரங்களிலும் கட்டடங்கள் குலுங்கின. அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையத்தின் தரவுகளின் படி அந்த நாட்டை தாக்கிய 3-வது சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இந்து பார்க்கப்படுகிறது. 1983ல் 5.1 என்ற ரிக்டர் அளவிலும், 1992ல் 4.8 என்ற ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் 4.8 என்ற அளவில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

மேலும், நியூ செர்சி நகரில் 240 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இது சக்திவாய்ந்த நிலநடுக்கமாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படா விட்டாலும் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர். நியூயார்க் நகரில் உள்ள சுதந்திரதேவி சிலையை மின்னல் தாக்கிய ஒருநாள் கழித்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மின்னல் தாக்கும் புகைப்படம் மற்றும் காட்சிகளும் நிலநடுக்கத்தின் போது சுதந்திரதேவி சிலை அருகே எடுக்கப்பட்ட காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

The post அமெரிக்க வரலாற்றில் 3-ஆவது சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. நியூயார்க்கில் 4.0 என்ற ரிக்டரில் 9.7 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : 3rd most ,New York ,Washington ,New Jersey ,United States ,northeastern ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்