×

பெருநாள் ஈகைத் திருநாள்..!

“இறைவனே பெரியவன்… இறைவனே பெரியவன்… அவனைத் தவிர வணக்கத்திற்கு உரியவன் வேறு யாரும் இல்லை. இறைவனே பெரியவன். அனைத்துப் புகழும் இறைவனுக்கே.” (அல்லாஹு அக்பர்… அல்லாஹு அக்பர்… லாயிலாஹா இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்… வலில்லாஹில் ஹம்து)பெருநாள் தொழுகை நடைபெறுவதற்கு முன்பாக, பள்ளிவாசலில் முழங்கப்படும் இறைத்துதி இது. இவ்வாறு இறைவனைப் போற்றித் துதிப்பதற்கு ஒரு காரணம் உண்டு. ரமலான் முப்பது நாள் நோன்புகளை யார் முழுமையாக நிறைவேற்றினார்களோ, அவர்களுக்கு மகிழ்ச்சியும் குதூகலமும் பொங்கும் நாள் ஈகைத் திருநாள்.“ஆஹா… முப்பது நாள் நோன்பிருந்தோம். பசி – தாகத்தைப் பொறுத்துக்கொண்டோம். வழிபாடுகளில் ஈடுபட்டோம். வேதத்தை ஓதினோம். இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரினோம். தான தர்மங்கள் செய்தோம்…” என்பதையெல்லாம் எண்ணி துளியளவும் மனத்தில் ஆணவமோ, அகங்காரமோ வந்துவிடக்கூடாது. நம்மையும் மீறி அப்படி ஓர் ஆணவ எண்ணம் வந்துவிட்டால்? உடனே காதில் பாய்கிறது. “இறைவனே பெரியவன். இறைவனே பெரியவன்…” எனும் இறைத்துதி. இதைக் கேட்டவுடனே மனத்தின் ஆணவம் அடியோடு அகன்றுவிடுகிறது.

“நாம் எவ்வளவு வழிபாடு செய்திருந்தாலும், எவ்வளவு தான தர்மங்கள் செய்திருந்தாலும், இறைவனுக்கு எதிரில் நாம் அற்பப்பதர்தான்… மகத்துவமும் வல்லமையும் மிக்க இறைவனின் அருள் இல்லாதிருந்தால், நம்மால் வழிபாடுகளில் ஈடுபட்டிருக்க முடியுமா?” எனும் சிந்தனை மேலோங்கி மனம் அமைதி அடைகிறது.பெருநாளன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, இருப்பதில் நல்ல உடைகளை அணிந்துகொள்ள வேண்டும். நறுமணம் பூசிக்கொள்ள வேண்டும். வைகறைத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்பாக, ‘ஃபித்ரு ஜகாத்’ என்னும் தர்மத்தைக் கட்டாயம் செய்ய வேண்டும்.

ஃபித்ரு ஜகாத் என்பது என்ன?பெருநாள் அன்று எந்த ஏழையும் பசியுடன் இருந்துவிடக் கூடாது என்பதற்காக இஸ்லாம் கடமையாக்கிய தானமாகும் இது. குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அத்தனை பேர்களின் சார்பாக தலா இரண்டரை கிலோ அரிசியை அல்லது அதற்குரிய தொகையை ஏழைகளுக்கு வழங்கிடவேண்டும். எடுத்துக் காட்டாக, ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர் எனில், இவர்கள் தங்கள் குடும்பத்திற்கு என்ன அரிசியைப் பயன்படுத்துகிறார்களோ, அதே தரத்திலான அரிசி பத்து கிலோவை தானமாக வழங்கிடவேண்டும்; அல்லது அதற்குரிய விலையைக் கொடுத்துவிட வேண்டும்.இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, பெருநாள் தொழுகைக்குப் போவதற்கு முன்பாகவே இதைத் தந்துவிட வேண்டும். ஆகவே, பெருநாளுக்கு இரண்டொரு நாள் முன்பாகக்கூட இதைத் தந்துவிடலாம் என்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஃபித்ரு ஜகாத் எனும் இந்த தானத்தை வழங்காவிட்டால்? “முப்பது நாளும் நீங்கள் வைத்த நோன்பு இறைவனைச் சென்று சேராமல் அந்தரத்தில் தொங்கும்” என்று நபிகளார் எச்சரித்துள்ளார்கள். பெருநாள் தொழுகையில் ஆற்றப்படும் சிறப்புரையை (குத்பா) செவி தாழ்த்திக் கேட்க வேண்டும். தொழுகையை நிறைவேற்றிய பிறகு தெரிந்தவர் – தெரியாதவர் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். நண்பர்கள், உறவினர்களுடன் நம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.எந்த வீதி அல்லது தெருவழியாகத் தொழுகைக்குச் சென்றோமோ அதே வழியில் திரும்பாமல் வேறு தெருக்கள், வீதி வழியாகத் திரும்புவது நல்லது. ஏனெனில் பெருநாளன்று வீதிகள் தோறும் வானவர்கள் நின்று நோன்புக் கடமையை நிறைவேற்றிய நல்லடியார்களுக்கு வாழ்த்துச் சொல்வார்கள்; பிரார்த்திப்பார்கள். அந்த வாழ்த்தும் பிரார்த்தனையும் நமக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக. பெருநாள் தொழுகையில் பெண்களும் கலந்துகொள்ளலாம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களும் கூட பெருநாள் திடலுக்கு வரலாம் என்பதும், தொழுகையில் கலந்துகொள்ளாமல் துஆ-இறைஞ்சுதலில் பங்குபெறலாம் என்பதும் மார்க்கம் காட்டும் வழிமுறை.பெருநாள் என்பது இறைவனுக்கு நன்றி செலுத்தும் நன்னாள் ஆகும்.வாசகர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஈத் முபாரக் – ஈகைத் திருநாள் வாழ்த்துகள்.
– சிராஜுல்ஹஸன்

The post பெருநாள் ஈகைத் திருநாள்..! appeared first on Dinakaran.

Tags : Purunal Ekai Thirunal ,God ,Hamdu ,Eid ,Eid Al-Adha ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…