×

குரங்கு கையில் கிடைத்த பூ மாலைபோல மோடி கையில் சிக்கி இந்தியா சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறது

*நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா பேச்சு

சத்தியமங்கலம் : குரங்கு கையில் கிடைத்த மாலைபோல, மோடி கையில் சிக்கி இந்திய நாடு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது என நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா சத்தியமங்கலத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசினார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா நேற்று பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் வடக்கு ஒன்றியம் கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி, கடம்பூர் மலைப்பகுதி ஆசனூர் மலைப்பகுதி மற்றும் தாளவாடி மலை பகுதிகளில் உள்ள கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

முன்னதாக சத்தியமங்கலம் அருகே உள்ள சின்னட்டிபாளையத்தில் தொடங்கி இந்திரா நகர், தாசரிபாளையம், கெம்பநாயக்கன்பாளையம், கடம்பூர் பஸ் நிலையம், குன்றி, சுஜில்கரை, கேர்மாளம், அரேப்பாளையம், தொட்டபுரம், நெய்தாளபுரம், இக்கலூர், தாளவாடி, பஸ் நிலையம், சூசையபுரம், அருள்வாடி, மல்லன்குழி, திகினாரை, கல்மண்டிபுரம், கெட்டவாடி, பனஹள்ளி ஆகிய பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்தில் ஆ‌.ராசா பேசியதாவது: திமுக ஆட்சியில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கடம்பூர் மற்றும் தாளவாடி மலைப்பகுதிகளில் மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. குறிப்பாக, தாளவாடியில் அரசு கலைக்கல்லூரி வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து, தாளவாடி பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இங்கு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் நீலகிரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளேன். தமிழ்நாட்டில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது முன்பிருந்த எடப்பாடி அரசு கஜானாவை காலி செய்து ரூ.5 லட்சம் கோடி கடனில் விட்டு சென்றது. மேலும், கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புகள்.

இவைகளை எல்லாம் சரி செய்து தேர்தல் அறிக்கையில் கூறியபடி அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மகளிருக்காக மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை திட்டம், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்பட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு. அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், நாட்டை கூறு போட்டு மோடி அரசியல் நடத்தி வருகிறார்.நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் பொய்யை மட்டுமே பேசி வரும் மோடியை வீட்டுக்கு அனுப்பகூடிய ஒரே சக்தியாக திமுக உள்ளது. ஐநா சபையே கண்டிக்கிற அளவுக்கு கேவலமாக பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல மோடி கையில் சிக்கி நாடு சின்னபின்னமாகி கொண்டிருக்கிறது.

எனவே, அவரிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் எனில் பொதுமக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் சிறப்பான ஆட்சியால் தமிழ்நாடு பாதுகாப்பாக உள்ளது.

இந்தியாவை காப்பாற்ற நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெற உதயசூரியனுக்கு வாக்களித்து ஆதரவு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு ஆ.ராசா அளித்த பேட்டியில் கூறியதாவது: நீலகிரியில் பாஜ வேட்பாளர் எல்.முருகன் வெற்றி பெறுவேன் என அவர் கூறுவது அவரின் நம்பிக்கை. நீலகிரி மாவட்டத்தில் டேன் டீ தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட எதையுமே கடந்த அதிமுக ஆட்சியில் செய்து கொடுக்கப்படவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நானே பேசி தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

முதல்வர் ஸ்டாலினை பற்றி பேச எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த அருகதையும் இல்லை’’ என்றார்.இந்த பிரசாரத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம், சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.ஏ.தேவராஜ், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் கேசிபி இளங்கோ, சத்தியமங்கலம் நகர செயலாளர் ஜானகி ராமசாமி, தாளவாடி மேற்கு ஒன்றிய செயலாளர் சிவண்ணா, தாளவாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தூர், தாளவாடி ஒன்றிய துணை செயலாளர் பிரகாஷ், ஒன்றிய இளைஞரணி மகாதேவ பிரசாத், மாணவரணி சிவபிரசாத், சத்தி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் சேகர், சுப்பிரமணியம், பெரியசாமி, ரமேஷ்குமார், ஆறுச்சாமி, கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன், துணைச் செயலாளர் ரஜினித்தம்பி, பாப்பா, பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, பேரூராட்சி துணை தலைவர் சந்திரன், இளைஞரணி ரமேஷ், மாணவரணி செல்வராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கொமதேக, ஆதித்தமிழர் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post குரங்கு கையில் கிடைத்த பூ மாலைபோல மோடி கையில் சிக்கி இந்தியா சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறது appeared first on Dinakaran.

Tags : India ,Modi ,Nilgiri ,DMK ,A. Raza ,Sathyamangalam ,Nilgiri Parliament ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி