×

பெருகி வரும் மயில்களால் பயிர்கள் பாதிப்பு வயல்களில் உயிர் வேலி அமைக்க வேண்டும்

*சிறு உயிரினங்கள் அழிவதை தடுக்கலாம்

அரவக்குறிச்சி : மயில்கள் பெருகி பயிரை அழித்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதை தடுக்க பழைய முறைப்படி உயிர்வேலி அமைக்க வேண்டும் என்றும் அதன் அவசியம் பற்றியும் முன்னோடி விவசாயி செல்வராஜ் ஆலோசனை கூறியுள்ளார்.மயில்கள் விவசாயிகளின் பயிர்களை கொத்தி திண்ற தேப்படுத்தி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. முன்னொரு காலத்தில் , அதிகமில்லை சுமார் முப்பது வருடங்கள் முன்பு,கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன. இட்டேரி என்பது கொங்கு நாட்டு சொல்.

இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித் தடம். இதுவே இட்டேரி என்று இங்கே அழைக்கப்படும்.இந்த இட்டேரி என்பது கள்ளி வகைகள், கிளுவை போன்ற முள்ளுச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்ச கடம்பு, நுணா,பூவரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிவகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடிவகைகள், மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகள் நிறைந்திருக்கும்.

இவை உயிர்வேலியாய் விவசாய நிலங்களை காத்து வந்தன. இங்கு எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து வந்தன. கறையான் புற்றுகள் , எலி பொந்துகள் நிறைய காணப்படும். நிழலும் ஈரமும், இலைக் குப்பைகளும் எப்போதும் காணப்படுவதால் எண்ணற்ற பூச்சியினங்கள் காணப்படும்.இவற்றை உணவாக உட்கொள்ள வண்டுகள், நண்டுகள், பாப்பிராண்டிகள், உடும்புகள், ஓணான்கள், கோழிகள், குருவிகள் அலுங்குகள், ஆமைகள் இப்படி பல உயிர்களும் இவற்றை உணவாக கொள்ள பாம்புகள், பருந்துகள், நரிகள் போன்றவையும் இருந்தன.

மனிதர்களுக்கு கோவப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம், போன்ற சுவையான கனிவகைகளும், கோவைக்காய், களாக்காய், பிரண்டை கொழுந்து, சீகைக்கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருட்களும், மூலிகைகளும் கிடைத்தன.ஏன் இன்று பணமழை பொழியும் கண்வலிப்பூக்கள் காய்கள் வேலியில்தான் ஆங்காங்கு படர்ந்திருக்கும் இந்த வேலியில் வாழ்ந்த எண்ணற்ற குருவிகள், ஓணான்கள், தவளைகள் பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை அழித்தொழித்தன. பாம்புகள், ஆந்தைகள் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தின. பறவைகளின் எண்ணிக்கையை பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின.

மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தின.ஆனால் இன்று விவசாய நிலங்கள் வீட்டுமனை ஆனபோது இந்த வேலிகளும் அழிந்தன. வண்டித்தடங்கள் தார் சாலைகள் ஆனபோது இட்டேரிகள் மறைந்தன. கொஞ்சம் நஞ்சம் மிஞ்சியிருக்கும் விவசாய நிலங்களுக்கு உயிர் வேலியை அழித்து காக்கா, குருவி கூட கூடு கட்டாத கம்பிவேலிகள் அமைக்கப்பட்டன. இதனால் எண்ணற்ற உயிரினங்கள் வாழ இடமின்றி போனது.

அதில் முக்கியமானது குள்ளநரிகள். இவை மயில்களுக்கு முக்கியமான எதிரிகள். இவை மயில்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் தந்திரமாக கவர்ந்து உணவாக்கிக்கொள்ளும். இவற்றை நாம் எங்கும் காண முடியவில்லை. காடுகளில் மட்டும் ஓரிரு இணைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகின்றன.

விளைவு மயில்களின் எண்ணிக்கை பன்மடங்குப் பெருகி விட்டன. நாம் பள்ளியில் குழந்தைகளுக்கு பல்லுயிரியம் பற்றி குழந்தைகளிடம் பாடம் எடுக்கிறோம். ஆனால், பள்ளிக்குச் செல்லாத நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் பல்லுயிர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் வகையில் உயிர்வேலிகள் அமைத்தனர். மயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மீண்டும் உயிர்வேலி முறைக்கு மாறுங்கள்.

விவசாயிகள் உயிர் வேலியை அகற்றியதின் விளைவுதான் மயில்களின் பெருக்கத்திற்கான காரண காரியமாக மாறியது விழிப்புணர்வோடு சிந்தித்து நாம் நம்மை மாற்றிக்கொண்டு மீண்டும் உயிர் வேலிகளை அமைத்தால்தான் பல்லுயிர் சுழற்சி எற்பட்டால்தான் மயிலினால் ஏற்படும் சேதரத்தை தடுக்க முடியும்.இன்றைய சூழலில் உயிர் வேலியை போட்டும் பழைய உயிர்வேலியை பரமரிக்க முடியவில்லை என்ற சூழலில் கம்பிவேலி என்ற முடிவை எடுத்த எடுத்து போட்ட விவசாயிகள் கம்பிவேலிக்கு அருகாமையில் 5அடி இடைவேலி விட்டு வரிசையாக வேப்பங்கன்று வேப்பவிதைகளையும் பளை விதைகளையும் பிலாக்கன்றுகளையும் இன்னும் பிற வறட்சியை தாங்கி வருகின்ற மாகனி,

போன்ற மரவகைகளையும் இன்னும் பல பழ வகை கன்றுகளை வைத்து வளர்த்தால் பல்லுயிர் உயிரினங்கள் பாதுகாக்கப்படும் அதன் விளைவாக உயிரின சங்கிலித்தொடர் வந்துவிடும் வருமானத்திற்கு வருமானமும் வரும் மயில்கள் போன்றவற்றின் பயிர்களின் சேதாரமும் காக்கப்படும் என்பதே திண்ணம் ஆகும் இப்படியாக அனைத்து விவசாயிகளும் கடைபிடித்து செயல்பட்டால் மயில் தொந்தரவும் அதனால் ஏற்படும் அழிவுகளும் தடுக்கப்படும் மயில்கள் பெருகி பயிரை அழித்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதை தடுக்க பழைய முறைப்படி உயிர்வேலி அமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பெருகி வரும் மயில்களால் பயிர்கள் பாதிப்பு வயல்களில் உயிர் வேலி அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Selvaraj ,
× RELATED புளியங்குளத்தில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் வாக்களிப்பு