×

தேர்தல் முடிந்தவுடன் மல்லப்புரம் மலைச்சாலை சீரமைப்பு தொடங்குமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வருசநாடு : மதுரை – தேனி மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம் மலைச்சாலை சீரமைப்புப் பணிகள் தேர்தல் முடிந்தவுடன் தொடங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ளது தாழையூத்து கிராமம். இந்த கிராமத்தில் இருந்து மதுரை மாவட்டம் மல்லப்புரத்துக்கு மலைச்சாலை செல்கிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்து – மல்லப்புரம் இடையே புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் இருந்து விருதுநகர், பேரையூர், எழுமலை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த சாலை வழியாக சென்றால் பயண தூரம் குறைவு. எனவே பிரதான சாலையை தவிர்த்து பலர் மலைச்சாலையை பயன்படுத்த தொடங்கினர். மேலும் காலை, மாலை நேரங்களில் மலைச்சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்களும் இயக்கப்பட்டன.

இதனால் இந்த சாலையில் நாளடைவில் வாகன போக்குவரத்து அதிகரித்தது.இந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்து – மல்லப்புரம் இடையே அரசு மினி பஸ் சேவையும் தொடங்கப்பட்டது. ஆனால், மலைச்சாலையில் தொடர்ந்து பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால்மண் சரிவு மற்றும் சாலையின் குறுக்கே செடிகள் வளர்ந்ததால் அதன் அளவு குறுகியது. மேலும் மழை காரணமாக சாலை மேலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இதனால் மினி பஸ் சேவை தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது.கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் சாலை அதிகளவில் சேதமடைந்துவிட்டது.

சாலை குறுகியதால் ஒரே நேரத்தில் ஆட்டோ, கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் கூட விலகி செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், மலைச்சாலையின் ஓரங்களில் பெரும்பாலான இடங்களில் தடுப்பு சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் லாரி, வேன் போன்ற பெரிய வாகனங்கள் விலகி கடந்து செல்வது சிரமமாக உள்ளது. அதனால் தற்போது இந்த சாலை வழியாக டூவீலர்கள் மட்டுமே அதிகளவில் செல்கின்றன.மொத்தம் 8 கி.மீ. தொலைவுள்ள இந்த சாலையில் தேனி மாவட்ட எல்லை வரை கடந்த புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், மதுரை மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள எஞ்சிய 7 கிமீ தொலைவு சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், “மல்லப்புரம் மலைச்சாலையில் புதிய தார்சாலை அமைத்து, பஸ் வசதி கிடைத்தபிறகு முத்தாலம்பாறை, தாழையூத்து உள்ளிட்ட கிராம மக்கள் மதுரை மாவட்டம் மல்லப்புரம் பகுதியில் நிலங்களை வாங்கி விவசாய பணிகளில் ஈடுபட்டனர். இதேபோல மல்லப்புரம் பகுதி மக்கள் தாழையூத்து பகுதியில் விவசாய நிலங்கள் வாங்கினர். சாலை நல்ல நிலையில் இருந்தபோது விவசாயிகள் தோட்டங்களுக்கு சென்று வரவும், விளை பொருட்களை ஏற்றி வரவும் எளிதாக இருந்தது. ஆனால் தற்போது சாலை சேதமடைந்ததால் போக்குவரத்து குறைந்துக்கு செல்ல ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்காக நீண்ட நேரம் காத்தி தோட்டங்களுருக்க வேண்டியுள்ளது.

மேலும் ஆட்டோ போன்ற வாகனங்களுக்கு அதிக பணம் கொடுத்து விளை பொருட்களை ஏற்றி வர வேண்டி உள்ளது என்றார். எனவே தேர்தல் முடிந்தபின்பு இந்த மலைச் சாலை பணிகளை தொடங்கினால் கிராம மக்களுக்கு பயனளிக்கும்’’ என்றனர். முத்தாலம்பாறை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துதேவர் கூறியதாவது: மதுரை மாவட்டம் எழுமலை, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களுக்கு உசிலம்பட்டி வழியாக பிரதான சாலையில் சென்றால் 70கிமீ தொலைவு செல்ல வேண்டும். ஆனால் மல்லப்புரம் மலைச்சாலையை பயன்படுத்தினால் 20 கிமீ தொலைவில் கிராமங்களுக்கு சென்றுவிடலாம், அதனால் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் பணிகளை தொடங்க வேண்டும் என்றார்.

The post தேர்தல் முடிந்தவுடன் மல்லப்புரம் மலைச்சாலை சீரமைப்பு தொடங்குமா? appeared first on Dinakaran.

Tags : Mallapuram hill road ,Varusanadu ,Madurai - Theni ,Theni ,Kadamalai-Mylai union ,Mallapuram hill ,Dinakaran ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்