×

அதிபராக துடிக்கும் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்

*இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக செயலாளர் பேச்சு

நாகர்கோவில் : கன்னியாகுமரி தொகுதி இந்தியா கூட்டணியின் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்திற்கு திமுக மாநகர செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ராமசுப்பு பேசியதாவது: கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் விஜய் வசந்த் மாபெரும் வெற்றி பெறுவார் என மக்கள் கூறுகின்றனர். ராகுல் காந்தியை பார்த்து எதிர்கட்சியினர் பயப்படுகின்றனர். மோடிக்கு அவர் சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் விஜய் வசந்த் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.

திமுக மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ் பேசியதாவது: காங்கிரஸ் பேரியக்கம் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அதனை வீடு வாரியாக தெரிவிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு முதல்வர்களை சிறையில் அடைத்துள்ளனர். காங்கிரசின் வங்கி கணக்கை முடக்கியுள்ளனர். இதற்கு முடிவு கட்ட, மக்களாட்சிக்கு எதிராக அதிபராக வேண்டும் என்று துடிக்கும் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டுபவர் பிரதமராக வருவார் என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர் ஸ்ரீவல்லபிரசாத் பேசியதாவது: இந்த தேர்தல் இரண்டு சித்தாந்தம் கொள்கைகளுக்கு இடையிலானது. ஜனநாயகத்தை அழிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்கும் இடையிலான போட்டி. தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேசியதாவது: மோடியின் பாசிசம் வேரடி மண்ணோடு அகற்றப்பட வேண்டும். இந்தியா கூட்டணியில் கொள்கை ரீதியாக நாங்கள் இணைந்துள்ளோம். நீட் தேர்வு வேண்டாம் என தமிழ்நாட்டில் ஒலித்தது. தொடர்ந்து கர்நாடகாவில், ராஜஸ்தானில் ஒலித்தது. ஆனால் தற்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் ஒலித்துள்ளது என்றார்.

வேட்பாளர் விஜய்வசந்த் பேசுகையில், கன்னியாகுமரியில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும், தமிழகத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றார்.

கூட்டத்தில் திமுக மகளிரணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்பி பெல்லார்மின், முன்னாள் எம்எல்ஏ ராஜன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசாமி, மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், விடுதலைசிறுத்தைகள் கட்சி மாநகர செயலாளர் அல்காலித், துணை மேயர் மேரிபிரின்சி லதா, கவுன்சிலர் ரிஸ்வானா, அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், திமுக மாநகர அவைத்தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் சற்குருகண்ணன், திக வெற்றிவேந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post அதிபராக துடிக்கும் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Modi ,DMK ,India Alliance ,Nagercoil ,Kanyakumari ,city secretary ,Anand ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி