×

படந்தாலுமூட்டில் ரூ.21 லட்சம் சிக்கியது பிரசார வாகனங்களில் சோதனை நடத்த உத்தரவு

*இதுவரை ரூ.1.73 கோடி பறிமுதல்

நாகர்கோவில் : கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பறக்கும்படை கைப்பற்றிய தொகை ரூ.1.73 கோடியை தாண்டி உள்ளது. கட்சிகளின் தேர்தல் பணிமனை அலுவலகம், பிரசாரத்தில் செல்லும் கார்களிலும் அதிரடி சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மக்களவை தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி குமரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் மொத்தம் ரூ. 1 கோடியே 29 லட்சத்து 87 ஆயிரத்து 622 தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் முதல் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் மொத்தம் ரூ.20 லட்சத்து 94 ஆயிரத்து 320 பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே கிள்ளியூர் பறக்கும் படை அதிகாரி வேணுகோபால் தலைமையிலான பறக்கும் படையினர் கருங்கல் அருகே நடுத்துறை பகுதியில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் உதயமார்த்தாண்டம் மாணிக்க விளைபகுதியை சேர்ந்த அஜித் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 2லட்சத்து 2 ஆயிரத்து அறுபது ரூபாயை பறிமுதல் செய்தனர்.

படந்தாலுமூடு பகுதியில் விளவங்கோடு தாசில்தார் லீலாபாய் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று மாலை வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ. 20 லட்சத்து 90 ஆயிரத்து 440 ரூபாய் இருந்தது. அதனை கொண்டு வந்த நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்த வினீஷ் (39) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பல்கில் மேலாளராக பணியாற்றி வருவதாகவும், மாலை 4.30 மணிக்குள் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் பணத்தை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விளவங்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை ரூ.1 கோடியே 73 லட்சத்தை தாண்டி உள்ளது. இதற்கிடையே வாக்குப்பதிவுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள், மதுபான வினியோகம் உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியுடன், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடக்க இருக்கிறது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள், தலா 3 நிலையான கண்காணிப்பு குழு, 3 செலவின குழுக்கள் என அமைக்கப்பட்டு தொகுதி முழுவதும் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

மேயர், விஜய்வசந்த் கார்களில் சோதனை

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த், நேற்று காலை கருங்கல் பகுதியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இந்த பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநகராட்சி மேயருமான வக்கீல் மகேஷ், தனக்கு சொந்தமான காரில் சென்று கொண்டிருந்தார். வடசேரி சந்திப்பில் அவரது கார் சென்ற போது, அந்த பகுதியில் நின்ற பறக்கும் படையினர் காரை நிறுத்தி சோதனை நடத்தினர். மேலும் காரில் திமுக நிர்வாகிகள் இருந்தனர். அவர்களிடம் பணம் எதுவும் அளவுக்கு அதிகமாக உள்ளதா? என்பதையும் சோதனை செய்தனர்.

காரில் எதுவும் இல்லை. இதையடுத்து காரை அனுப்பி வைத்தனர்.இதுேபால் கன்னியாகுமரி நாடளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் நேற்று காலை கருங்கல் பகுதியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அவர் காலையில் பிரசாரம் முடிந்து, மதியம் நாகர்கோவில் வந்து கொண்டிருந்தார். தக்கலை அருகே வரும் போது அந்த பகுதியில் வாகன சோதனையில் இருந்த தேர்தல் பறக்கும் படையினர், விஜய் வசந்த் காரை நிறுத்தினர்.

காரில் சோதனை நடத்த வேண்டும் என கூறினர். இதையடுத்து விஜய் வசந்த் காரில் இருந்து இறங்கினார். காரின் பின் பகுதியில் இருந்த பேக் உள்பட அனைத்து பொருட்களையும் எடுத்து சோதனை செய்தனர். பின்னர் சோதனைக்கு பின் விஜய் வசந்த் காரை அனுப்பி வைத்தனர். இந்த சோதனையை வீடியோ பதிவும் செய்தனர்.

The post படந்தாலுமூட்டில் ரூ.21 லட்சம் சிக்கியது பிரசார வாகனங்களில் சோதனை நடத்த உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Patandalumoot ,Nagercoil ,Air Force ,Kanyakumari ,Lok Sabha ,
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...